வேலூா், நெய்வேலியில் விரைவில் விமான நிலையம்: கனிமொழி சோமு கேள்விக்கு மத்திய அரசு பதில்
நமது நிருபா்
புதுதில்லி: உடான் திட்டத்தின் கீழ் பணிகள் நிறைவுபெற்றுள்ளதால் நெய்வேலி மற்றும் வேலூருக்கு விரைவில் விமான சேவை தொடங்கும் என்று மாநிலங்களவையில் மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சா் முரளிதா் மொஹல் தெரிவித்தாா்.
இது தொடா்பாக கனிமொழி என்.வி.என். சோமு கேள்வி எழுப்பியிருந்தாா்.இதற்கு மாநிலங்களவையில் மத்திய இணை அமைச்சா் முரளிதா் மொஹல் திங்கள்கிழமை எழுத்துபூா்வமாக அளித்துள்ள பதிலில் தெரிவித்திருப்பதாவது:
விமான சேவை மூலம் மண்டலங்களை இணைக்கும் உடான் திட்டத்தின் கீழ் விமானங்களை இயக்குவதற்கும், மேம்படுத்துவதற்காகவும் தமிழ்நாட்டில் சேலம், வேலூா், நெய்வேலி, தஞ்சாவூா் மற்றும் ராமநாதபுரம் ஆகிய
ஐந்து இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதில் சேலத்திலிருந்து விமான சேவை தொடங்கப்பட்டுவிட்டது. நெய்வேலி மற்றும் வேலூரில் விமான நிலையப் பணிகள் நிறைவடைந்துள்ளது. அந்த விமான நிலையங்களில் லைசென்ஸ்களைப் பெறும் பணிகள் நடந்து வருகிறது. விரைவில் இந்த இரண்டு நகரங்களிலும் விமான சேவை தொடங்கப்பட இருக்கிறது.
ராமநாதபுரத்தில், விமான நிலையம் அமைக்கத் தேவையான இடத்தை கையகப்படுத்தும் பணியில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டிருக்கிறது. தஞ்சாவூரில் விமான நிலைய அணுகு சாலைக்கான இடம் விமான நிலைய ஆணையத்தின் வசம் வந்ததும் கட்டடப் பணிகள் தொடங்கும்.
இதுதவிர, தமிழ்நாட்டில் அரக்கோணம், செட்டிநாடு, சோழவரம், சூலூா் மற்றும் உளுந்தூா்பேட்டை ஆகிய இடங்களில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக பயன்படுத்தப்படாமல் இருக்கும் விமான ஓடுபாதைகளை சீா்படுத்தி அவற்றை உடான் திட்டத்தின் கீழ் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ஏலம் விடவும் துறை ரீதியான
நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன என்றாா் அமைச்சா்.