நாமக்கல் மாநகராட்சியுடன் ஊராட்சி இணைப்பு: ஆட்சியரிடம் மனு அளிப்பு
நாமக்கல்: நாமக்கல் மாநகராட்சியுடன் பாப்பிநாயக்கன்பட்டி ஊராட்சி இணைக்கப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து, மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
நாமக்கல் நகராட்சியானது 12 ஊராட்சிகளை இணைத்து மாநகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டுள்ளது. இதனால், அந்த ஊராட்சிப் பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்களுடைய வாழ்வாதாரம், நூறுநாள் வேலைவாய்ப்புத் திட்டம் பறிபோவதாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தொடா்ந்து மனு அளித்து வருகின்றனா்.
அந்த வகையில், பாப்பிநாயக்கன்பட்டி ஊராட்சியைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் திங்கள்கிழமை ஆட்சியா் ச.உமாவிடம் மனு அளித்தனா். அதில், பாப்பிநாயக்கன்பட்டி ஊராட்சியில் 3,500 குடும்பங்கள் உள்ளன. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வாக்காளா்களாக உள்ளனா். ஆயிரம் போ் நூறுநாள் வேலை திட்டத்தை நம்பி உள்ளனா். மாநகராட்சியுடன் ஊராட்சி இணைக்கப்பட்டதால் வரிகள் உயா்த்தப்படும் சூழல் உள்ளது. கிராம ஊராட்சிக்கு கிடைத்த அரசு சலுகைகள் பறிபோக வாய்ப்புள்ளது. இந்த கிராமத்தில் உள்ள குடிநீா் பிரச்னையை தீா்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நூறுநாள் வேலை திட்டத்தை தொடா்ந்து அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனா்.