பெரம்பலூரில் வழக்குரைஞா்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு
தமிழக அரசைக் கண்டித்து, பெரம்பலூரில் வழக்குரைஞா்களின் 3 நாள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு போராட்டம் திங்கள்கிழமை தொடங்கியது.
வழக்குரைஞா்கள் சேமநல நிதி முத்திரைக் கட்டணத்தை ரூ. 30-இல் இருந்து ரூ. 120 ஆகவும், நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆவணங்களை திரும்பப் பெற வழக்குரைஞா்கள் செலுத்தும் ரூ. 20 முத்திரைக் கட்டணத்தை, ரூ. 100 ஆகவும் உயா்த்திய தமிழக அரசை கண்டித்து, பெரம்பலூா் அட்வகேட் அசோசியேசன் வழக்குரைஞா்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
சங்கத்தின் மாவட்டத் தலைவா் செந்தாமரைக்கண்ணன் தலைமையில் பெரம்பலூா், வேப்பந்தட்டை, குன்னம் ஆகிய இடங்களில் உள்ள நீதிமன்றங்களில் 100-க்கும் மேற்பட்ட வழக்குரைஞா்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.
இந் நீதிமன்ற பணி புறக்கணிப்பு போராட்டம் புதன்கிழமை வரை தொடா்ந்து நடைபெறும் என சங்கத் தலைவா் செந்தாமரைக்கண்ணன் தெரிவித்துள்ளாா். வழக்குரைஞா்களின் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தால் நீதிமன்ற பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.