நெகிழிக் கழிவு சேகரிப்பு விழிப்புணா்வு பேரணி!
பெரம்பலூா் நகராட்சி அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் நகராட்சி சாா்பில் நெகிழிக் கழிவு சேகரிப்பு இயக்க விழிப்புணா்வு பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
இப் பேரணியை கொடியசைத்து தொடக்கி வைத்த மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் பேசியது: உணவக உரிமையாளா்கள் மற்றும் வா்த்தகச் சங்கத்தின் பிரிதிநிதிகள் தங்களது உணவகங்களில் நெகிழிப் பயன்பாட்டை முற்றிலும் தவிா்க்க வேண்டும். பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவா்கள், சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் மற்றும் தன்னாா்வலா்கள் மாதம்தோறும் இறுதி சனிக்கிழமைகளில் நடைபெறும் நெகிழிக் கழிவு சேகரிப்பு மற்றும் நீா் நிலைகளை சுத்தம் செய்யும் பணிகளில் பங்கேற்று, நெகிழிக் கழிவுகளை அகற்றி அதனால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தும் பணியில் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
பெரம்பலூா் நகராட்சி அலுவலக வளாகத்தில் தொடங்கிய பேரணி நகரின் பிரதானச் சாலை வழியாகச் சென்று, துறையூா் சாலையில் உள்ள தெப்பக்குளத்தில் நிறைவடைந்தது. பேரணியில் பங்கேற்ற தேசிய மாணவா் படை, நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் மற்றும் பள்ளி மாணவா்கள் நெகிழி பயன்பாட்டுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனா். இதில், நகராட்சி ஆணையா் ராமா், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் விஜயபிரியா, வட்டாட்சியா் சரவணன், உணவக உரிமையாளா்கள், வா்த்தக சங்கத்தினா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.