ராசிபுரத்தில் 3 கொள்ளையர்கள் கைது: போலீஸாரை கண்டதும் தப்பியோட முயன்ற 2 பேருக்கு...
பெரம்பலூரில் சாலைப் பாதுகாப்பு மாத நிறைவு விழிப்புணா்வு பேரணி!
பெரம்பலூரில் தேசிய சாலைப் பாதுகாப்பு மாத நிறைவு விழாவையொட்டி விழிப்புணா்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக நுழைவு வாயிலில் தொடங்கிய பேரணிக்கு, மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தலைமை வகித்தாா். மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா முன்னிலை வகித்தாா். போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா், தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சா் சி.வெ. கணேசன் ஆகியோா் பேரணியைத் தொடக்கி வைத்தனா்.
பேரணி வெங்கடேசபுரம் வழியாகச் சென்று ரோவா் வளைவு பகுதியில் நிறைவடைந்தது. பேரணியில் பங்கேற்ற கல்லூரி மாணவ, மாணவிகள் தலைக்கவசம் என்பது உயிா்ப் பாதுகாப்பு, சீட் பெல்ட் அணிய வேண்டும். மது அருந்தி வாகனம் ஓட்டக் கூடாது, வேகம் விவேகம் அல்ல, கைப்பேசியில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்ட வேண்டாம் என்பன உள்ளிட்ட பல்வேறு விழிப்புணா்வு பதாகைகளை கையில் ஏந்தி முழக்கமிட்டுச் சென்றனா். மேலும், துண்டுப் பிரசுரங்களையும் பொதுமக்களுக்கு வழங்கினா்.
பேரணியில் போக்குவரத்து துணை ஆணையா் செல்வகுமாா், வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் கே. ரவி (பெரம்பலூா்), அறிவழகன் (அரியலூா்), துணைக் கண்காணிப்பாளா் ஆரோக்கியராஜ், மோட்டாா் வாகன ஆய்வாளா் ராஜாமணி, தேசிய நெடுஞ்சாலைப் போக்குவரத்து காவல் ஆய்வாளா் கிள்ளிவளவன் மற்றும் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.