வாக்காளா்கள் 'வன்முறையை விட கல்வியை'த் தோ்ந்தெடுங்கள்: பஞ்சாப் முதல்வா் வலியுறு...
அந்த 'மாசு'பட்டவர் யார் என்று இதுவரை தெரியவில்லை?: தமிழிசை கேள்வி
சென்னை: அண்ணா பல்கலை மாணவி விவகாரத்தில் அந்த 'மாசு'பட்டவர் யார் என்று நமக்கு இதுவரை தெரியவில்லையே? என்றவர், பத்திரிகையாளர்களின் செல்போனை பறிமுதல் செய்யும் நடவடிக்கை மிக மிக கண்டனத்துக்குரியது என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை இஎஸ்ஐ மருத்துவமனையின் கே.கே.நகரில் தடவியல் துறையின் கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டார்.
அவர் மேடையில் பேசத் தொடங்கிய போது மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சுமார் 20 நிமிடங்கள் மின்சாரம் இன்றி பேசாமல் இருந்தார். பின்னர் மின்சாரம் வந்ததும் பேசிய தமிழிசை, தமிழகத்தில் இது போல மின்சாரம் துண்டிப்பு இல்லை என்றால் தான் ஆச்சரியம். ஆனால் மின்துறை அமைச்சர் 24 மணி நேரமும் மின்சாரம் கிடைக்கும் என்று சொல்கிறார் என்று கூறினார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களுடன் பேசிய தமிழிசை,
தேசிய மாநாடு நடத்தும் அளவுக்கு இஎஸ்ஐ மருத்துவமனை முன்னேறி இருக்கிறது. 30 ஆண்டுகளுக்கு முன் இதே மருத்துவமனையில் ஸ்கேன் செய்ய வசதி இல்லை. ஆனால் இன்று அப்படி இல்லை என்று கூறினார்.
மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு இடம்பெறவில்லை என்று தமிழக கட்சிகள் சொல்கின்றன. ஆனால் தமிழ்நாட்டில் இருந்து வந்தவர் அங்கே பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது, திருக்குறள் பற்றி பேசி இருப்பது எல்லாம் கண்ணுக்கு தெரியாது.மேலும் ரூ.12 லட்சம் சம்பளம் பெறுபவர்கள் ஆண்டுக்கு வரி செலுத்த வேண்டாம் என்ற அறிவிப்பு தமிழர்களுக்கும் பொருந்தும் தானே என்றார்.
யார் அந்த சார்?
அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் யார் அந்த சார் என்பதை கண்டுபிடிக்காமல் பத்திரிகையாளர்களின் செல்போனை பறிமுதல் செய்யும் நடவடிக்கை மிக மிக கண்டனத்துக்குரியது.
பத்திரிகையாளர்கள் செல்போன் கூட சுதந்திரமாக வைத்துக் கொள்ள முடியாத அளவுக்கு பத்திரிகை சுதந்திரம் என்ன ஆனது? குற்றவாளிகள் செல்போன்களை பறிமுதல் செய்து ஆய்வு செய்யுங்கள்.
இசிஆர் விவகாரம்
இசிஆர் விவகாரத்தில் தவறு செய்பவர்கள் திமுக கொடியை பயன்படுத்தலாம் என்பதை துணை ஆணையர் ஒப்புக்கொள்கிறார். அப்போ சுங்கசாவடியில் திமுக கொடியை பயன்படுத்துகிறார்களா என்பதை ஆர்.எஸ்.பாரதி எண்ணத்தின் படி நாம் பார்க்க வேண்டும். திமுக கொடி என்ன தேசிய கொடியா ? எல்லோரும் பயன்படுத்தலாம் என்பதற்கு? இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
திமுக கொடி கட்டிருந்த இருந்த அந்த காரை கண்டுபிடிக்க 4-5 நாள். திமுக கொடி இருந்தால் நம்பகத்தன்மை இல்லை என்பதை ஆர்.எஸ்.பாரதி ஒத்துக் கொண்டிருக்கிறார். துணை ஆணையரும் ஒப்புக் கொண்டிருக்கிறார். திமுக கொடி கட்டிய காரில் குற்றவாளிகள் பயணிக்கிறார்களா? திமுக கொடி பறக்கும் வீடுகளில் குற்றவாளிகள் இருக்கிறார்களா? என்று எண்ணக்கூடிய நிலை தமிழகத்தில் உருவாகி இருக்கிறது.
இதையும் படிக்க | தேர்தல்களை கண்காணிக்க 'ஈகிள்' பெயரில் குழு அமைத்த காங்கிரஸ்!
அந்த மாசுபட்டவர் யார்
அண்ணா பல்கலை மாணவி விவகாரத்திலும் இதைத்தான் சொன்னார்கள்.பிரியாணி யாருக்கு போட்டார்கள், யாருக்கு சமைத்து கொடுத்தார் என்றெல்லாம் தெரிந்து கொண்டும்.அந்த மாசுபட்டவர் யார் என்று நமக்கு இதுநாள் வரை தெரியவில்லையே? திமுக மீது மக்கள் நம்பிக்கையை இழந்திருக்கிறார்கள். குற்றவாளிகள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அவர்கள் திமுக உறுப்பினராக இருக்கிறார்களா? திமுக கொடி கட்டி பறக்கிறார்களா? பெண்களுக்கு தமிழகத்தில் எந்த இடத்திலும் பாதுகாப்பு இல்லை. இதில் முதல்வர் கவனம் செலுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
வேங்கை வயல் விவகாரம்
திமுக கூட்டணியில் இருக்கும் திருமாவளவன், வேங்கை வயல் விவகாரத்தில் தமிழக காவல்துறை மீது நம்பிக்கை இல்லை என்று சிபிஐ விசாரணை வேண்டும் என்று கூறுகிறார்.
திமுக கூட்டணியில் திருமாவளவன் நீடிப்பாரா?
விசிகவில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா தவெக இணைந்ததும் திருமாவளவனை வந்து சந்தித்திருக்கிறார். அப்படியென்றால் முதலில் நீ போ பின்னாடி நான் வருகிறேன் என்று கூட அதன் பொருளாக இருக்கலாம். அவ்வளவு பாசமாக ஆதவ் அர்ஜுனாவை கட்டியணைத்து மாரில்
பாயவில்லை மடியில் தான் பாய்ந்தது என்ற அளவிற்கு வேறு கட்சிக்குப் போன ஒருவரை மகிழ்ச்சியாக வரவேற்பார்களா? என்றவர்,முதலில் ஆதவ் அர்ஜுனாவை அனுப்பி வைத்துவிட்டு ஆதவன் கூட்டணியிலேயே திருமாவளவன் இருப்பாரா? என்பது தெரியவில்லை என்று தமிழிசை கூறினார்.