தமிழகத்தில் 8.42 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: உணவுத் துறை செயலா் ஜெ.ராதாக...
பிசிசிஐ விருதுகள்: யார் யாருக்கு என்னென்ன விருதுகள்? முழு விவரம்!
இந்தியாவுக்காக கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு விருதுகள் வழங்கும் நமன் விருதுகள் விழா நேற்று (பிப்ரவரி 1) மும்பையில் நடைபெற்றது.
வாழ்நாள் சாதனையாளர் விருது - சச்சின் டெண்டுல்கர்
பிசிசிஐ சார்பில் நடத்தப்பட்ட இந்த விழாவில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கருக்கு பிசிசிஐ-ன் சி.கே.நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. 51 வயதாகும் சச்சின் டெண்டுல்கர் இந்திய அணிக்காக 664 போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை அவர் தன்வசம் வைத்துள்ளார்.
இதையும் படிக்க: இங்கிலாந்தை 150 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!
விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்ட சச்சின் டெண்டுல்கர் பேசியதாவது: எப்போதும் நீங்கள் விளையாடும் விளையாட்டுக்கு மதிப்பளியுங்கள். உங்களது விளையாட்டு மீது அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். இந்திய அணிக்காக என்னால் மீண்டும் விளையாட முடியாது என்பதை எனது கடைசி நாள் ஆட்டத்தில் உணர்ந்தேன். அதனால், இந்திய அணிக்காக விளையாடும்போது, மகிழ்ச்சியுடன் அதனை அனுபவித்து விளையாடுங்கள் என்றார்.
சிறந்த கிரிக்கெட் வீரர் விருது - ஜஸ்பிரித் பும்ரா
கடந்த ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருது இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு வழங்கப்பட்டது. இங்கிலாந்து மற்றும் வங்கதேசத்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற தொடர்களில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு பும்ரா முக்கிய காரணமாக இருந்தார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜஸ்பிரித் பும்ரா 32 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். தொடர் நாயகன் விருதினையும் வென்றார்.
இதையும் படிக்க: ஷிவம் துபேவுக்கு ஹர்ஷித் ராணா சரியான மாற்று வீரரா? முன்னாள் கேப்டன் கூறுவதென்ன?
சிறந்த வீராங்கனை விருது - ஸ்மிருதி மந்தனா
கடந்த 2023-2024 ஆம் ஆண்டுக்கான சிறந்த வீராங்கனைக்கான விருது இந்திய அணியின் ஸ்மிருதி மந்தனாவுக்கு வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு ஒருநாள் போட்டிகளில் 743 ரன்கள் குவித்த ஸ்மிருதி மந்தனா, ஐசிசியின் ஒருநாள் போட்டிகளுக்கான சிறந்த வீராங்கனை விருதினை அண்மையில் வென்றார்.
பிசிசிஐ-ன் சிறப்பு விருது - ரவிச்சந்திரன் அஸ்வின்
அண்மையில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பிசிசிஐ-ன் சிறப்பு விருது வழங்கப்பட்டது.
டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக ரவிச்சந்திரன் அஸ்வின் 537 விக்கெட்டுகள் வீழ்த்தி, அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களில் இரண்டாவது இடத்தில் உள்ளார். ஒட்டுமொத்தமாக பார்க்கையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ள 8-வது வீரர் என்ற பெருமை அவரையேச் சேரும்.
சர்வதேச போட்டிகளில் சிறந்த அறிமுக வீரர் விருது - சர்ஃபராஸ் கான்
சர்வதேச போட்டிகளில் சிறந்த அறிமுக வீராங்கனை - ஆஷா சோபனா
ஒருநாள் போட்டிகள் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய தீப்தி சர்மாவுக்கு பதக்கம் வழங்கப்பட்டது.
இதையும் படிக்க: டி20 போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காக ஜோஸ் பட்லர் புதிய சாதனை!
உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டமைக்கான விருது - தனுஷ் கோட்டியான்
சிறந்த கிரிக்கெட் சங்கத்துக்கான விருது மும்பை கிரிக்கெட் சங்கத்துக்கு வழங்கப்பட்டது.
உள்ளூர் போட்டிகளுக்கான சிறந்த நடுவருக்கான விருது அக்ஷய் டோட்ரேவுக்கு வழங்கப்பட்டது.