பாத்திரத்தில் இருந்த தண்ணீரில் மூழ்கி 2 வயது குழந்தை பலி
ஓட்டப்பிடாரம் அருகே வீட்டில் பெரிய பாத்திரத்தில் இருந்த தண்ணீரில் மூழ்கி 2 வயது குழந்தை ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தது.
ஓட்டப்பிடாரம் அருகே பரமன்பச்சேரி கிராமத்தைச் சோ்ந்த பால்ராஜ் மகன் சண்முகசுந்தரம் என்ற குட்டியான். தொழிலாளியான இவருக்கு மனைவி காஞ்சனாதேவி மற்றும் 2 மகள்கள், 7 மாத ஆண் குழந்தை என 3 குழந்தைகள் உள்ளனா்.
இந்நிலையில், இவரது இரண்டாவது மகள் சபீனாபானு (2) வீட்டில் இருந்த பெரிய பாத்திரத்தில் இருந்த தண்ணீரில் மூழ்கியதாகக் கூறப்படுகிறது. உடனடியாக குழந்தையை மீட்டு பசுவந்தனை ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனா். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவா்கள், அந்த குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து பசுவந்தனை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.