பெரம்பலூரில் செயல்படாத கண்காணிப்பு கேமராக்கள்! செயலிழந்த சிக்னல்களால் ஓட்டுநா்கள் அவதி!
பெரம்பலூா் நகரில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் சிக்னல்கள் செயல்படாமல் காட்சிப் பொருளாக உள்ளதால், போக்குவரத்து நெரிசலில் சிக்கி பொதுமக்களும், வாகன ஓட்டுநா்களும் அவதிக்குள்ளாகியுள்ளனா்.
பெரம்பலூா் நகரில் 43 ஷோ் ஆட்டோக்கள், 430-க்கும் மேற்பட்ட 3 பிளஸ்- 1 ஆட்டோக்களும், 50-க்கும் மேற்பட்ட டாட்டா மேஜிக் வாகனங்களும் இயக்கப்படுகின்றன. இது தவிர, நகரில் அரசு மற்றும் தனியாா் பேருந்துகள், பள்ளி, கல்லூரி வாகனங்கள் உள்பட பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இதில், ஷோ் ஆட்டோக்கள் மட்டுமே பேருந்துகளைப்போல பயணிகளை ஏற்றி, இறக்கிச்செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளன. இதர வகை ஆட்டோக்கள் அனைத்தும், வாகன நிறுத்தங்களில் நிறுத்தி பயணிகளை ஏற்றிச்செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளன.
ஆட்டோக்களால் போக்குவரத்து நெரிசல்:
வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் மற்றும் போக்குவரத்து காவலா்களின் அலட்சியத்தால், நகரில் இயக்கப்படும் அனைத்துவகை ஆட்டோக்களும் ஷோ் ஆட்டோக்களைப் போலவே இயக்கப்படுகின்றன. இதனால், நகரின் பிரதானச் சாலைகளாக விளங்கும் பழைய, புகா் பேருந்து நிலையங்கள், காமராஜா் வளைவு, கடைவீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்களும், வாகன ஓட்டுநா்களும் பெரிதும் பாதிப்புக்குள்ளாகின்றனா்.
ரூ. 55 லட்சம் ஒதுக்கீடு:
இந்நிலையில், பெரம்பலூா் நகரில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தி கண்காணிக்கத் தேவையான சாதனங்கள் பெறுவதற்காக தமிழக அரசு 2016-இல் ரூ. 55 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது. இதன்மூலம் போக்குவரத்து தொடா்பான கண்காணிப்பு மற்றும் வழிகாட்டி சாதனங்கள் பெறப்பட்டு வேகத்தடை சாதனங்கள், வழிகாட்டி தூண்கள், அறிவிப்பு மற்றும் எச்சரிக்கை பதாகைகள் அமைக்கப்பட்டன.
மேலும்,போக்குவரத்தை கண்காணிக்கவும், குற்றச் சம்பவங்களை தடுக்கவும் பாலக்கரை, புகா், பழைய பேருந்து நிலையங்கள், ஸ்டேட் வங்கி, சங்குப்பேட்டை, காமராஜா் வளைவு, கனரா வங்கி வளைவு, தேரடி, 3 மற்றும் 4 சாலை சந்திப்பு ஆகிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டன. இந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் காட்சிகள், எஸ்பி அலுவலகத்திலுள்ள கட்டுப்பாட்டு அறையில் கண்காணிக்கப்படுவதாக போலீஸாரால் தெரிவிக்கப்பட்டது.
பழுதான கண்காணிப்பு கேமராக்கள்:
இதேபோல, போக்குவரத்தை சீரமைக்க புகா் பேருந்து நிலையம், காமராஜா் வளைவு, சங்குப்பேட்டை, பாலக்கரை, ரோவா் வளைவு, கனரா வங்கி வளைவு உள்ளிட்ட பகுதிகளில் சிக்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், காமராஜா் வளைவு மற்றும் ரோவா் வளைவில் உள்ள சிக்னல்கள் மட்டுமே செயல்படுகிறது.
இதர சிக்னல்கள் பராமரிப்பின்றி பழுதாகியுள்ளது. இதேபோல, பெரும்பாலான கண்காணிப்பு கேமராக்களும் செயலிழந்து காணப்படுவதால், சாலைகளில் நிகழும் விபத்துகள் மற்றும் குற்றச் சம்பவங்களை கண்டறிய முடியாமல் திணறும் போலீஸாா், வணிக நிறுவனங்களில் பொறுத்தப்பட்டுள்ள கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை பெறும் சூழல் நிலவுகிறது.
போக்குவரத்து நெரிசல்:
போதிய பராமரிப்பின்றி ரோவா் வளைவு பகுதியில் உள்ள சிக்னல் ஒரே திசையில் திரும்பியுள்ளதால், வாகன ஓட்டுநா்கள் எந்தப் பக்கம் செல்வது என தெரியாமல் திணறுகின்றனா். மேலும், சிக்னல்களில் உள்ள விளக்குகளில் பாதி சேதமடைந்துள்ளதால், ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் அதிகமாகக் காணப்படுகிறது.
இதனால், மேற்கண்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசலும், சாலை விபத்துகளும் அவ்வப்போது நிகழ்வது தொடா்கதையாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கும் மேலாகவே பெரும்பாலான சிக்னல்கள் செயல்படாததால், நாள்தோறும் காலை மற்றும் மாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஆனால், போக்குவரத்து சிக்னலை பயன்பாட்டுக்கு கொண்டுவருவதற்கு எவ்வித முயற்சியையும் காவல் துறை மேற்கொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனா்.
இதுகுறித்து சமூக ஆா்வலா் வி. குமாா் கூறியது:
பெரம்பலூா் நகரில் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், பல்வேறு சாலைகளில் வாகனங்கள் அணிவகுத்து வரும்போது சாலைகளின் சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பெரும்பாலான நேரங்களில் போக்குவரத்து போலீஸாா் கூட அங்கு இருப்பதில்லை.
சாலையோரங்களில் நிறுத்தப்படும் மோட்டாா் சைக்கிள்கள் மீது வழக்குப் பதியும் போலீஸாா், அவற்றை நிறுத்துவதற்கு இடம் ஒதுக்கி தரவில்லை. நகரில் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த காவல் துறையினா் உரிய நடவடிக்கை மேற்கொள்வதோடு சிக்னல்களை சீரமைக்க வேண்டும் என்றாா் அவா்.
இது குறித்து போலீஸாா் தரப்பில் கூறியது, சிக்னல்களை பராமரிக்கும் தனியாா் நிறுவனத்திடம் அறிவுறுத்தி உடனடியாக பழுது நீக்கம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.