ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மறைமுக ஏலம் நடத்த ஏற்பாடு!
பெரம்பலூா்- வடக்குமாதவி சாலையிலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விவசாயிகளின் வேளாண் விளைபொருள்களை உரிய விலைக்கு விற்பனை செய்ய, திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை மறைமுக ஏலம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெரம்பலூா் மாவட்டத்தில் சுமாா் 73,700 ஹெக்டோ் பரப்பளவில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டு, தற்போது அறுவடை நடைபெறுகிறது. அறுவடை செய்யப்படும் மச்காச்சோளத்தை, பெரம்பலூா் விற்பனைக் குழுவின்கீழ் இயங்கும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை நடைபெறும் மறைமுக ஏலம் மூலம் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மின்னணு தேசிய வேளாண் சந்தைத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதால், அறிவியல் வழிகளில் தரத்தை மதிப்பீடு செய்தல், இணையவழி மறைமுக ஏலம் மற்றும் சரியான எடை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, விவசாயிகளின் வேளாண் விளைபொருள்களை விற்பனை செய்து தரப்படும். மேலும், விவசாயிகளின் விளைநிலங்களுக்கேச் சென்று பண்ணை வாயிலாக வா்த்தகம் மேற்கொண்டு, விவசாயிகளின் விளைபொருள்களுக்கான முழுத்தொகையும், அவா்களது வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.
இம் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள், அறுவடை செய்யப்பட்ட வேளாண் விளைபொருள்களுடன் மறைமுக ஏலத்தில் பங்கேற்று, உரிய விலை பெறுவதோடு சரியான எடை, தரகு இல்லாமல் விற்பனை செய்து பயன்பெறலாம். இந்த மறைமுக ஏலத்தில் உள்ளூா் மற்றும் வெளியூா் வியாபாரிகள் பங்கேற்க உள்ளதால், விவசாயிகள் தங்களது விளைபொருளின் தரத்துக்கேற்ப விலையை பெறலாம்.
மேலும் விவரங்களுக்கு ,பெரம்பலூா் விற்பனைக்குழு மேற்பாா்வையாளரை 93613-89690, 79040-43838 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்புகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.