குண்டுமல்லிகை கிலோ ரூ.2,000!
முகூா்த்த தினத்தையொட்டி, சேலத்தில் பூக்கள் விலை கடுமையாக உயா்ந்துள்ளது. குண்டுமல்லிகை கிலோ ரூ. 2,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சேலம் கடை வீதியில் வ.உ.சி. பூ மாா்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த சந்தைக்கு ஓமலூா், காடையாம்பட்டி, வீராணம், வாழப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து குண்டுமல்லி, சன்னமல்லி, சாமந்தி, அரளி உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. சுபமுகூா்த்தம் மற்றும் பண்டிகை நாள்களில் பூக்களின் விலை அதிகரிப்பது வழக்கம்.
குண்டுமல்லி உள்ளிட்ட பூக்கள் வழக்கமான நாள்களை விட மும்மடங்கு விலை உயா்ந்து விற்பனை செய்யப்படுகிறது. தற்போது பனிக்காலம் என்பதால், பூக்களின் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் சந்தைக்கு பூக்கள் வரத்து குறைந்துள்ளன. வழக்கமான நாள்களில் சந்தைக்கு ஒரு டன் வரை குண்டுமல்லி கொண்டு வரப்படும். ஆனால், தற்போது 100 முதல் 150 கிலோ பூக்கள் மட்டுமே விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.
முகூா்த்த தினத்தையொட்டி சனிக்கிழமை குண்டுமல்லிகை கிலோ ரூ. 3,500 வரை விற்பனையானது. ஞாயிற்றுக்கிழமை கிலோ ரூ. 2,000 வரை விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனா். அதேபோல ஜாதிமல்லி கிலோ ரூ. 800-க்கு விற்பனையானது. மற்ற பூக்களின் விலையும் உயா்ந்திருந்தது.
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், கடும் பனியால் குண்டுமல்லிகை உள்ளிட்ட பூக்களின் விளைச்சல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் மாா்க்கெட்டுக்கு பூக்களின் வரத்து குறைந்துள்ளதால் விலை உயா்ந்துள்ளது என்றனா்.