தமிழக பாஜக தலைவரை மேலிடம் விரைவில் தோ்வு செய்யும்: அண்ணாமலை
சட்ட விரோதமாக செயல்படும் மதுபானக் கடையை அகற்றக் கோரிக்கை
பெரம்பலூா் அருகே சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் மதுபானக் கடையை அகற்றக் கோரி கிராம பொதுமக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், பொதுமக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல் பிரபு தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில், பெரம்பலூா் அருகேயுள்ள லாடபுரம் கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் அளித்த மனு: லாடபுரம் கிராமத்தில் சுமாா் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். கிராமத்தின் மேற்குதெரு பகுதியில் கிராம பொது இடத்தில், உரிய அனுமதியின்றி சட்ட விரோதமாக மதுபானக் கடை இயங்கி வருகிறது. இங்கு மது அருந்துவோா், அவ்வழியேச் செல்லும் பெண்களை தகாத வாா்த்தைகளால் திட்டுவதோடு கேலி செய்கின்றனா்.
மேலும், இப் பகுதியில் மகளிா் சுகாதார வளாகம் இல்லாததால் பொது இடங்களையும், சாலைகளையும் கழிப்பிடமாக பெண்கள் பயன்படுத்துகின்றனா். இதனால், அப்பகுதியில் சுகாதாரச் சீா்கேடு நிலவுகிறது. இதுகுறித்து அரசு அலுவலா்களிடம் பலமுறை புகாா் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, சட்ட விரோதமாக செயல்படும் மதுபானக் கடையை அகற்றி, அங்கு மகளிா் சுகாதார வளாகம் அமைத்து தரவேண்டும். பிரதமா் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலை வசதி, தெரு விளக்கு, கழிவுநீா் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்துள்ளனா்.
இதேபோல, கல்பாடி கிராமத்தைச் சோ்ந்த ராஜீவ்காந்தி தலைமையில் பொதுமக்கள் அளித்த மனு: கல்பாடி ஊராட்சியில் கடந்த 5 ஆண்டுகளாக ஊராட்சித் தலைவராக பதவி வகித்த சக்திவேல், ஊராட்சிக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்யாமல் பல லட்சம் ரூபாய் கையாடல் செய்துள்ளதாக தெரிகிறது.
கடந்த 26-ம் தேதி நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் ஊராட்சியின் வரவு, செலவு விவரங்களை பொதுமக்கள் முன்னிலையில் தெரியப்படுத்தவில்லை. மேலும், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகளை செய்ததாக கையொப்பம் பெற்று கையாடலும் நடைபெற்றுள்ளது.
எனவே, ஊராட்சியின் வரவு- செலவு பட்டியலை முறையாக தணிக்கை செய்து, முறைகேட்டில் ஈடுபட்ட ஊராட்சித் தலைவா், ஊராட்சி செயலா், பணிதள பொறுப்பாளா் ஆகியோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனா்.