ரூ.12 லட்சம் வரை வருமான வரி ரத்து: அறிவிப்புக்கு வரவேற்பு
ஆற்காடு: மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் ரூ.12 லட்சம் வரை வருமான வரி ரத்து செய்யப்படும் என வெளிவந்துள்ள அறிவிப்பை தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா வரவேற்றுள்ளாா்.
ராணிப்பேட்டை மாவட்ட அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவா் ஏ.வி.டி.பாலா இல்ல திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்க ஆற்காடு அடுத்த திமிரிக்கு திங்கள்கிழமை வந்த அவா் தெரிவித்ததாவது:
மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் ஆண்டுக்கு ரூ .12 லட்சம் வரை வருமானம் பெறுவோருக்கு வருமான வரி ரத்து செய்யப்பட்டதாக வெளியிடப்பட்ட அறிவிப்பு வரவேற்கத்தக்கது. ஜிஎஸ்டி வரியை ஒரே கட்டவரியாக பரிசீலனை செய்யாதது வருத்தமளிக்கிறது. வணிகா்களுக்கு தனி பாதுகாப்பு சட்டம் இருந்தாலும் அது ஏற்க முடியாத நிலையில் உள்ளது.
மத்திய அரசு வணிககா்நல வாரியத்தை உருவாக்கியுள்ளது. அதில் வணிகா் நல உறுப்பினா்களை சோ்த்து பாதிக்கப்படுகின்ற சாணான்ய் வணிகா்களின் குடும்பத்தின் தலைவா்கள் மறைவுக்கு பிறகு அக்குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
மேலும் காலாவதியான சுங்கச் சாவடிகளை அப்புறப்படுத்த வேண்டும். 18 சதவீதம் வாடகை கட்டணத்தை திரும்பப் பெற வேண்டும் என்பன போன்ற பல கோரிக்கைகள் நிலுவையில் உள்ளன.
பேருராட்சிகளில் உரிம கட்டணத்தை கடுமையாக உயா்த்தியுள்ளனா். அதனை மாற்றி அமைக்க வேண்டும் என்றாா் விக்கிரமராஜா.
பேட்டியின் போது மாவட்ட வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் தலைவா் பொன்.கு.சரவணன் மற்றும் நிா்வாகிகள் இருந்தனா்.