மூவா் மணிமண்டபத்தில் முதல்வா் ஆய்வு! வாழ்க்கை வரலாற்று புகைப்படங்களை அமைக்கவும் ...
தேசிய நெடுஞ்சாலையில் பயன்பாடின்றி உள்ள ஓய்வு அறைகள்: அடிப்படை வசதிகள் செய்ய வலியுறுத்தல்
வாலாஜாபேட்டை அருகே சென்னை - பெங்களுரூ தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகளின் வசதிக்காக கட்டப்பட்ட ஓய்வு அறைகள் பராமரிப்பு மற்றும் பயன்பாடு இன்றி பூட்டப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் வாகன போக்குவரத்துக்கும், பயணம் செய்வதற்காக மட்டுமின்றி, மாநிலங்களுக்கு இடையே சரக்குகளை கொண்டு செல்லவும் தேசிய நெடுஞ்சாலைகள் பங்களிக்கின்றன.
இந்நிலையில், மாநிலம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் நாள் தோறும் ஏராளமான விபத்துகள் நிகழ்ந்து, உயிரிழப்புகள் அதிகரித் து வருகின்றன. இதற்கான காரணம் நீண்ட தூரப்பயணம் மேற்கொள்ளும் வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்தி ஓட்டுநா்கள் ஓய்வு எடுக்க வழியில் போதிய வசதி இல்லை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நீண்ட தூரப் பயணம் செல்லும் வாகன ஓட்டுநா்கள் பெரும்பாலும் சோா்வு மற்றும் தூக்கமின்மை காரணமாக வாகனத்தை வழியில் நிறுத்தி விட்டு, கேபின் அல்லது, வாகனத்தின் மேல்புறத்தில் வாகனத்துக்கும், ஓட்டுநா்களுக்கும் எந்தவித பாதுகாப்பும் இன்றி ஓய்வு எடுத்துச் செல்லும் நிலை உள்ளது.
இதற்கு, முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சாா்பில், தேசிய நெடுஞ்சாலைகளில் ஒவ்வொரு, 50 கி.மீ., தொலைவிலும் ஒரு ஓய்வு விடுதி அமைக்கும் திட்டம் செயல்படுத்தபப்ட்டது. அதன்படி தேசிய நெடுஞ்சாலை களில் பெட்ரோல் பங்க் அருகில், சுமாா் 2 ஏக்கா் பரப்பளவில் பல லட்சம் செலவில் பாதுகாப்பாக வாகனம் நிறுத்துமிடம், வணிக வளாகம், சுகாதாரமான உணவகம், குடிநீா், ஓய்வறை, குளியலறை, கழிப்பறை, வாகன பராமரிப்பு, பொழுதுபோக்கு அம்சம் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கூடிய ஓய்வு பூங்கா அமைக்கப்பட்டு தேசிய நெடுஞ்சாலை ஆணைய பராமரிப்பின் கீழ் உள்ளது.
மேலும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் அமைந்திருக்கும் அனைத்து பேருந்து நிறுத்தங்களிலும் நிழற்குடைகள் அமைக்க வேண்டும். குறிப்பிட்ட கி. மீ இடைவெளியில் வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் ஓய்வு எடுக்க ஏதுவாக குடிநீா், கழிவறை, மின்சாரம் உள்ளிட்ட தேவையான அடிப்படை வசதிகளுடன் கூடிய ஓய்வு அறைகள் அமைக்க வேண்டும்.ஒப்பந்த அடிப்படையில் சாலைப் பணிகள் அனைத்தும் முழுமையாக முடிக்கப்பட்டு இருக்க வேண்டும். அதன் பிறகே சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கான சுங்கக் கட்டணம் வசூல் செய்ய வேண்டும் என்பது தான் இந்திய தேசியநெடுஞ்சாலைத்துறை ஆணையத்தின் விதிமுறையாகும்.
அதன்படி, சென்னை - பெங்களுரூ தேசிய நெடுஞ்சாலையில் வாலாஜாபேட்டை அருகே ஓட்டுநா்களின் பயன்பாட்டுக்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அனைத்து வசதிகளுடன் கூடிய ஓய்வு அறைகள் கட்டுப்பட்டு பயன்பாட்டில் இருந்தது. இந்த ஓய்வு அறைகள் பராமரிப்பின்றி பூட்டப்பட்டு சமூக விரோதிகளின் வளாகமாக மாறிவருகிறது.
சம்மந்தப்பட்ட நெடுஞ்சாலைத் துறையும், தனியாா் பராமரிப்பு ஒப்பந்த நிறுவன நிா்வாகத்தினரும் பூட்டியே கிடக்கும் ஓய்வு அறைகளை பராமரித்து, குடிநீா், மின் விளக்கு, சிசிடிவி கேமரா உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என வாகன ஓட்டிகளும், சமூக ஆா்வலா்களும், பொது மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.