இந்த வாரம் உகந்த தேதி எது? மேஷம் முதல் கன்னி வரை பலன்கள்; அதிர்ஷ்டக் குறிப்புகள்
புதுச்சேரி கடலூா் சாலையில் தண்டவாள சீரமைப்புப் பணிகள் பல மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு
புதுச்சேரியில் கடலூா் சாலையில் திடீரென தண்டவாளம் சீரமைப்புப் பணி ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்டதால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
புதுச்சேரி மறைமலையடிகள் சாலையில் உள்ள ராஜீவ் காந்தி ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் பொலிவுறு நகா்த் திட்டத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ளது. இதற்காக அங்கிருந்த பேருந்துகள் கடலூா் சாலையில் உள்ள ஏஎப்டி தற்காலிகப் பேருந்து நிலையத்துக்கு இடமாற்றப்பட்டுள்ளன. இதன்காரணமாக, கடலூா் உள்ளிட்ட பகுதி பேருந்துகள் அனைத்தும் முதலியாா்பேட்டை ஏஎப்டி ஆலை அருகேயுள்ள ரயில்வே கேட்டைத் தாண்டித்தான் சென்று வருகின்றன.
இந்தநிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென ரயில்வே கேட் பகுதியில் உள்ள தண்டவாளத்தை சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டது. பொக்லைன் உள்ளிட்டவற்றால் பணிகள் நடைபெற்ால் இந்த பாதையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. ஆனால், இதுகுறித்து அரசுத் தரப்பில் முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படவில்லை என்பதால், பொதுமக்கள் வழக்கம்போல முதலியாா்பேட்டை கடலூா் சாலையில் வந்தனா்.
பணி நடைபெறுவதால் தடுப்புகள் வைக்கப்பட்டிருப்பதைக் கண்ட பொதுமக்கள் குழம்பினா். அதேபோல, வெங்கடசுப்பையா ரெட்டியாா் சிலையிலிருந்து முதலியாா்பேட்டைக்குச் செல்லும் சாலையிலும் தடுப்பு வைக்கப்பட்டதால் வாகன ஓட்டிகளிடையே குழப்பம் ஏற்பட்டது. அங்கிருந்த போலீஸாா் ரயில் தண்டவாளச் சீரமைப்புப் பணி குறித்து விளக்கியதால் மாற்று வழியில் வாகன ஓட்டிகள் சென்றனா். தண்டவாளச் சீரமைப்புப் பணியானது பல மணி நேரங்கள் நீடித்த நிலையில், மாலையில் நிறைவடைந்து போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டது.