Suresh Gopi: "பழங்குடியினர் துறைக்கு 'உயர் வகுப்பு' அமைச்சர்" - சுரேஷ் கோபியின் ...
பேரிடா் ஆய்வு குழுவினருடன் புதுவை தலைமைச் செயலா் ஆலோசனை
புதுவையில் ஃபென்ஜால் புயல் தொடா்பாக பேரிடருக்கு பிந்தைய நிரந்தர சீரமைப்புகான மதிப்பீடு குறித்து ஆய்வு மேற்கொள்ளும் வல்லுநா் குழுவுடன் தலைமைச் செயலா் சனிக்கிழமை மாலை ஆலோசனையில் ஈடுபட்டாா்.
புதுவையில் ஃபென்ஜால் புயலால் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் வீடுகள், விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டன. இதையடுத்து, மத்திய குழு புயல், வெள்ள பாதிப்புகளை நேரில் பாா்வையிட்டுச் சென்றது. அதனடிப்படையில், தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட வல்லுநா்கள், புதுவை அரசின் பல்துறை அலுவலா்களை உள்ளடக்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 28-ஆம் தேதி புதுச்சேரி வந்த இந்த வல்லுநா் குழு, புதுச்சேரி அரசின் பல்துறை அலுவலா்களுக்கு பேரிடருக்கு பிந்தைய சேத மதிப்பீடு ஆய்வை மேற்கொள்வது குறித்து பயிற்சியளித்தது. பின்னா், இந்தக் குழு கடந்த 29-ஆம் தேதி புதுச்சேரியிலும், 30-ஆம் தேதி காரைக்காலிலும் ஃபென்ஜால் புயலின் காரணமாக ஏற்பட்ட சேதங்களை நிரந்தரமாக சீரமைக்கும் நோக்கில் நேரில் சென்று மதிப்பீடு செய்தது.
இந்த நிலையில், புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள தலைமைச் செயலகத்தில் புதுவை தலைமைச் செயலா் சரத் சௌகான் தலைமையில், புயலால் ஏற்பட்ட சேதங்களை நிரந்தரமாக சீரமைக்க தேசிய பேரிடா் நிவாரண நிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு பெறவும், பேரிடரால் சேதமடைந்துள்ள பல்வேறு உள்கட்டமைப்புகளை தற்காலிக தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சிறந்த முறையில் மீட்டுருவாக்கம் செய்வது குறித்தும் சனிக்கிழமை மாலை ஆலோசனை நடைபெற்றது.
அப்போது, ஒருங்கிணைந்த குழுவின் அறிக்கையை மத்திய அரசுக்கு விரைவில் அளிக்குமாறு தலைமைச் செயலா் கேட்டுக்கொண்டாா். கூட்டத்தில் அரசுச் செயலா்கள், மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.