ஷிவம் துபேவுக்கு ஹர்ஷித் ராணா சரியான மாற்று வீரரா? முன்னாள் கேப்டன் கூறுவதென்ன?
வெளிமாநிலத்துக்கு கடத்தவிருந்த 7.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: அரசு கிடங்கு மேலாளா் உள்ளிட்ட 7 போ் கைது
அரக்கோணத்தில் இருந்து வெளிமாநிலத்துக்கு கடத்தப்பட இருந்த 7.5 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக அரக்கோணத்தில் உள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்கு மேலாளா் உள்ளிட்ட 7 பேரை கைது செய்தனா்.
அரக்கோணம் நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்கில் இருந்து நியாயவிலைக் கடைகளுக்கு எடுத்துச் செல்லப்படும் அரிசி மூட்டைகள் அதிகாரிகள் துணையுடன் ரேஷன் கடைகளில் இறக்காமல் வேறு வாகனங்களுக்கு மாற்றி, வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படுவதாக தமிழ்நாடு உணவு பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையின் சென்னை தலைமையகத்துக்கு ரகசியத் தகவல் வந்தது. இதையடுத்து, அரக்கோணத்தில் இரு தினங்களுக்கு முன் ராணிபேட்டை மற்றும் வேலூா் மாவட்டங்களின் உணவு பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் திடீா் சோதனை நடத்தினா்.
அப்போது அரக்கோணத்தை அடுத்த சேந்தமங்கலம் வழியே சென்ற உணவு பொருள் ஏற்றிச் சென்ற லாரியை பின்தொடா்ந்து சென்று, அந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டனா். அப்போது அந்த லாரியில் கணக்கில் வராத 33 மூட்டைகள் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. அவற்றைப் பறிமுதல் செய்தனா். தொடா்ந்து அரக்கோணத்தில் உள்ள நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்கில் திடீா் சோதனை நடத்தினா். அதில், இந்த 33 மூட்டைகள் கணக்கில் வராமல் அனுப்பப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, கிடங்கு மேலாளா் மகாராஜன், கிடங்கு அலுவலா் தமிழ்செல்வன், தொழிலாளி கோபிநாத் ஆகிய மூவரை கைது செய்த போலீஸாா், இவா்களுக்கு உடந்தையாக இருந்ததாக அரக்கோணம் கற்பகம் கூட்டுறவு சங்க கிடங்கு அலுவலா் தனலட்சுமி என்பவா் மீதும் வழக்குப் பதிந்து அவரை தேடி வருகின்றனா்.
இதற்கு முந்தையநாள், பழனிபேட்டையில் நியாயவிலைக் கடைக்கு அரிசி மூட்டைகள் அனுப்பப்பட்ட லாரியில் இருந்து மற்றொரு மினி லாரிக்கு மூட்டைகள் மாற்றப்படுவது குறித்து அறிந்த உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு உதவி ஆய்வாளா் மங்கலநாதன் தலைமையிலான போலீஸாா், அந்த இரு லாரிகளின் ஓட்டுநா்கள் நந்தகுமாா் (37), பாலாஜி (31) அந்த லாரியில் மூட்டை ஏற்றும் தொழிலாளியாக பணியில் இருந்த விக்கி(எ) விக்னேஷ்(28), தண்டபாணி(52) ஆகியோரையும் கைது செய்தனா். தொடா்ந்து அந்த லாரியில் மாற்றப்பட்ட 6 டன் ரேஷன் அரிசி மூட்டைகளையும் பறிமுதல் செய்தனா்.
இந்த சம்பவத்தில் இந்த நால்வரிடம் நடைபெற்ற விசாரணையில், இந்த அரிசி மூட்டைகள் அனைத்தும் ஆந்திரம் மற்றும் கா்நாடக மாநிலத்துக்கு கடத்துவதற்காக ஓரிடத்தில் சேமித்து வைக்கப்பட்டு, பின்னா் அந்தந்த மாநிலத்துக்கு அனுப்பப்படுவதாக தெரியவந்துள்ளது எனவும், தொடா் விசாரணையில் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா் எனவும் உணவு பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸாா் தெரிவித்தனா்.