U19 Women's T20 World Cup: மீண்டும் சாம்பியன்... தென்னாப்பிரிக்காவைச் சுருட்டிய இந்திய மகளிர் அணி!
19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில், தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று மகுடம் சூடியிருக்கிறது இந்திய மகளிர் அணி.
மலேசியாவில் கடந்த இரண்டு வாரமாக நடைபெற்று இந்த உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப் போட்டியில், இந்திய அணியும், தென்னாப்பிரிக்க அணியும் இன்று இறுதி போட்டியில் மோதின. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய தென்னாப்பிரிக்க வீராங்கனைகளை இந்திய வீராங்கனைகள் பெவிலியன் பக்கம் அனுப்பிக் கொண்டே இருந்தனர்.
20 ஓவர்கள் முழுமையாக பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி 82 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்தியா சார்பில் அபரமாகப் பந்துவீசிய ஆல்ரவுண்டர் கோங்காடி த்ரிஷா 4 ஓவர்கள் வீசி வெறும் 15 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதேபோல், பருணிகா சிசோடியா, ஆயுஷி சுக்லா, வைஷ்ணவி சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், ஷப்னம் ஷகில் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
அதைத்தொடர்ந்து, 83 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கிக் களமிறங்கிய இந்திய அணி 11.4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 84 ரன்கள் அடித்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. பந்துவீச்சைப் போலவே பேட்டிங்கிலும் ஓப்பனிங்கில் களமிறங்கி அதிரடி காட்டிய கோங்காடி த்ரிஷா 33 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் அடித்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றி ஆட்டநாயகி விருது வென்றார்.
மேலும், இந்தத் தொடரில் 7 போட்டிகளில் ஒரு சதம் உட்பட 309 ரன்கள் குவித்து டாப் ஸ்கோரர் பட்டியலில் முதலிடம் பிடித்த கோங்காடி த்ரிஷா தொடர் நாயகன் விருதையும் வென்றார். அதேபோல், இந்தத் தொடரில் அதிக விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் மற்றொரு இந்திய வீராங்கனை வைஷ்னவி சர்மா, மலேசியா அணிக்கெதிரான ஆட்டத்தில் ஹாட்ரிக் விக்கெட்டுடன் 5 விக்கெட்டுகள் வீழ்த்தியது உட்பட மொத்தமாக 17 விக்கெட்டுகள் எடுத்து முதலிடம் பிடித்தார்.
இந்த வெற்றியின் மூலம், 2023-ம் ஆண்டு முதல் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பையைத் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக இந்திய அணி வென்றிருக்கிறது.