செய்திகள் :

Men Psychology: ஆண்கள் ஏன் அதிகம் பேசுவதில்லை?

post image

’பெண்களைவிட ஆண்கள் குறைவாகவே பேசுவார்கள். ஏனென்றால், ஆண்கள் தகவலை மட்டுமே சொல்பவர்கள். பெண்கள் தங்கள் உணர்வுகளையும் சேர்த்துப் பேசுபவர்கள். அதனால்தான், பெண்கள் அதிகம் பேசுகிறார்கள்’ - ஆண், பெண் பேச்சு தொடர்பான இந்தக் கருத்து பல காலமாக நம் சமூகத்தில் உலவிக்கொண்டிருக்கிறது. இது எந்தளவுக்கு உண்மை; ஆண்களுக்குப் பிடிக்காத வார்த்தைகள் என்னென்ன? மனநல மருத்துவர் ஸ்வாதிக் சங்கரலிங்கம் சொல்வதைக் கேளுங்கள்.

ஆண்கள் ஏன் அதிகம் பேசுவதில்லை?

‘’ஆண்களைவிட பெண்கள் மூன்று மடங்கு கூடுதலாகப் பேசுவார்கள் என்பது மரபணு ரீதியில் நிரூபிக்கப்பட்ட ஒன்றுதான். தவிர, ஒரு காலகட்டம் வரை ஆண்கள் மட்டுமே வேலைக்குச் சென்றுகொண்டிருந்தார்கள். வீட்டிலிருந்த பெண்கள் பேச்சின் மூலமே தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தினார்கள் அல்லது தனிமையைக் கடந்தார்கள். அதனாலும் அவர்கள் அதிகம் பேசுபவர்களாக அறியப்பட்டிருக்கலாம். பொதுவாகவே ஆண்கள் தங்கள் உணர்வுகளை வெளிக்காட்டுவது குறைவு. இதற்கு மிகப்பெரிய உதாரணம், அழுகை.

சரி, ஆண்கள் குறைவாகப் பேசுவதும் பெண்கள் அதிகமாகப் பேசுவதும் தற்போதும் அப்படியே இருக்கிறதா என்றால், மாறியிருக்கிறது என்பதுதான் உண்மை. ஆண்களிலும் அதிகமாகப் பேசுபவர்கள் இருக்கிறார்கள். பெண்களிலும் குறைவாகப் பேசுபவர்கள் இருக்கிறார்கள். சில நேரத்தில் இது சரிசமமாகவும் இருக்கிறது. சமீபத்திய ஆராய்ச்சிகளும் இதை ஏற்றுக்கொண்டிருக்கின்றன.

ஆண்கள் ஏன் அதிகம் பேசுவதில்லை?

உளவியல்ரீதியாகப் பார்த்தால், ஆணோ, பெண்ணோ குறைவாகப் பேசுகிற இயல்பு கொண்டிருந்தால் நிதானமானவர்களாகவும் தன்னம்பிக்கை நிறைந்தவர்களாகவும் இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். தேவைப்படுகிற இடங்களில் சரியாகப் பேசவும் தெரிந்துவிட்டால் வாழ்க்கையில் பல உச்சங்களைத் தொடும் அளவுக்கு அவர்கள் வளர்வதற்கும் வாய்ப்பிருக்கிறது. மற்றபடி, குறைவாகப் பேசுவதால் அவர் நல்லவர்; அதிகமாகப் பேசுவதால் இவர் கெட்டவர் என்றெல்லாம் நம்ப வேண்டியதில்லை’’ என்றவர், ’ஆண்களுக்குப் பிடிக்காத வார்த்தைகள் என்னென்ன... ஏன்’ என்பதைப்பற்றி விவரிக்க ஆரம்பித்தார்.

‘’ஆண்களுக்குப் பிடிக்காத வார்த்தைகள் என்பதைவிட கேள்விகள் என்று சொல்லலாம். அதையும் ‘மனைவி கேட்கிற கேள்விகள்’ என்று குறிப்பிட்டுச் சொல்லலாம். உதாரணத்துக்கு சில கேள்விகள். ‘ஆஃபீஸ்ல இருந்து எப்போ வருவீங்க’, ‘ஏன் லேட்’, ‘நிஜமாவே ஆஃபீஸ்லதான் இருக்கீங்களா’, ‘எப்போ வேலை முடியும்.’

இந்தக் கேள்விகளை ‘உன்னைப்பத்தி எனக்குத் தெரியாதா’ என்கிற சந்தேகத்திலும் கேட்கலாம். அல்லது ‘கணவருக்கு என்னாச்சோ’ என்கிற பயத்திலும் கேட்கலாம். மனைவி கேட்கிற விதத்திலேயே, கணவனுக்கு அது எந்த தொனியில் கேட்கப்படுகிறது என்பது புரிந்துவிடும். ‘கிளம்புற நேரத்துல புதுசா வேலை கொடுத்துட்டாங்க. வேற வழியில்லாம செஞ்சுகிட்டிருக்கேன். இதுல உன் சந்தேகத்துக்கு வேற பதில் சொல்லிட்டிருக்கணுமா’ என்று எரிச்சலாகி விடுவான். இவை அவனுக்குப் பிடிக்காத வார்த்தைகள் ஆகிவிடுகின்றன, அவ்வளவுதான்.

ஸ்வாதிக் சங்கரலிங்கம்

மனைவி சந்தேகத்துடன் கேள்வி கேட்டால் ‘தான் அப்படியில்லை’ என்பதைத் தெளிவுபடுத்த வேண்டியது கணவனின் கடமை. அதைப் புரிந்துகொள்வது மனைவியின் பொறுப்பு. ‘நீங்க லேட் நைட்ல வீட்டுக்கு வர்ற வரைக்கும் எனக்குத் தனியா இருக்க பயமா இருக்கு; உங்களுக்கு என்னவோ ஏதோன்னு டென்ஷனா இருக்கு’ என்ற தன்னுடைய பயத்தை மனைவி கணவருக்குப் புரிய வைக்க வேண்டும். கணவன் அந்த பயத்தைத் தடுக்க, தான் தாமதமாக வருவதை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். குறைந்தபட்சம் மெசேஜாவது செய்ய வேண்டும். இவற்றைச் செய்ய மறந்துவிட்டால், மனைவியிடமிருந்து போன் வந்தால் ‘இத்தனை மணிக்குள்ள வந்துடுவேன்’ என்பதை எரிச்சல் இல்லாமலாவது சொல்ல வேண்டும்.

இந்தக் காலத்தில் கணவன், மனைவி இருவருமே வேலைக்குச் செல்கிறார்கள். கணவர் தாமதமாக வந்தால் மனைவிக்கு சந்தேகம், பயம் வருவதைப்போல, மனைவி தாமதமாக வந்தால் கணவருக்கும் வருகிறது. பரஸ்பர நம்பிக்கை சந்தேகத்தை விரட்டி விடும். தன் மீதான துணையின் அக்கறைதான் பயமாக வெளிப்படுகிறது என்பதை கணவன்/மனைவி உணர வேண்டும். இத்தனை முறை போன் செய்தும் எடுக்கவில்லை என்றால், கணவன்/ மனைவி ஏதோ வேலையில் இருப்பார் என்று புரிந்துகொள்ள வேண்டும். நம்பிக்கையும் அக்கறையுமே திருமண வாழ்க்கையின் அஸ்திவாரம் ஆட்டம் காணாமல் காக்க வல்லவை. அதற்குப் பெண்கள், ஆண்களைப் புரிந்துகொள்ள வேண்டும். ஆண்கள், பெண்களைப் புரிந்துகொள்ள வேண்டும்.’’

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs