அந்த 'மாசு'பட்டவர் யார் என்று இதுவரை தெரியவில்லை?: தமிழிசை கேள்வி
ரூ.8.57 கோடி பரிசை வழங்கிடத் தமிழ்நாடு காத்திருக்கிறது!: முதல்வர் மு.க. ஸ்டாலின்
சிந்துவெளி பண்பாட்டின் எழுத்துமுறையை புரிந்துகொள்ள வழிவகை செய்யும் அறிஞருக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் (தோராயமாக ரூ. 8.57 கோடி) பரிசை வழங்கிடத் தமிழ்நாடு காத்திருக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜன.5 ஆம் தேதி தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை சார்பில் சிந்துவெளி பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு பன்னாட்டுக் கருத்தரங்கு சென்னை, எழும்பூர் அரசு அருங்காட்சியகக் கலையரங்கில் மூன்று நாள்கள் நடைபெற்றது.
இந்த கருத்தரங்கை தொடங்கி வைத்தும், சிந்துவெளி வரிவடிவங்களும் தமிழ்நாட்டுக் குறியீடுகளும்: ஒரு வடிவவியல் ஆய்வு என்ற நூலினை வெளியிட்டும் விழாப் பேருரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், சிந்துவெளிப் பண்பாட்டின் எழுத்து முறையை தெளிவாகப் புரிந்துகொள்ள உதவும் வழிவகையைக் கண்டறியும் அமைப்பு அல்லது நபருக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் (தோராயமாக ரூ. 8.57 கோடி) பரிசாக வழங்கப்படும்.
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையும், ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் சிந்து ஆய்வு மையமும் இணைந்து மேற்கொள்ளும் வகையில், சிந்துவெளி பண்பாடு குறித்தான ஆராய்ச்சிக்கு அறிஞர் ஐராவதம் மகாதேவன் பெயரில் ஆய்வு இருக்கை அமைக்கும் பொருட்டு ரூ. 2 கோடி நிதி நல்கை வழங்கப்படும்.
தமிழ்ப் பண்பாட்டின் தொன்மையை உலகம் அறிந்து கொள்ளும் வகையில் அயராது உழைக்கும் தொல்லியல் அறிஞர்கள் மட்டுமின்றி கல்வெட்டியல் ஆய்வாளர்கள் மற்றும் நாணயவியல் வல்லுநர்கள் ஆகியோரை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் இரண்டு அறிஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படும். இந்த மூன்று அறிவிப்புகளும் இந்தத் துறை ஆய்வுகளுக்கு வேகத்தையும், ஊக்கத்தையும் வழங்கும் என்று நான் நம்புகிறேன் என முதல்வர் கூறியிருந்தார்.
இதையும் படிக்க |மன்னிப்பு கேட்பாரா இபிஎஸ்?: அமைச்சர் ரகுபதி கேள்வி
இந்த நிலையில், மில்லியன் டாலர்கள் வேண்டுமா? இந்த பண்டைய ‘எழுத்துருக்களை கண்டறிய முனைக! என்ற தலைப்பில் ஆங்கில நாளிதழ் “தி நியூயார்க் டைம்ஸ்” நாளிதழ் கட்டுரை வெளியிட்டுள்ளது.
அதில், வெண்கல யுக நாகரிகத்தை பற்றிய ஆய்வுகளை வெளியிட்டு நீண்ட கால பண்பாட்டுப் போர் ஒன்றை அவர் முடிவுக்கு கொண்டு வர தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் முயற்சி செய்திருக்கிறார்.
இது ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக அறிஞர்களை குழப்பத்தில் ஆழ்த்திய ஒரு புதிர். இப்போது அதற்கு ஒரு அழகான பணப் பரிசு உள்ளது: புராதன சிந்துவெளி நாகரிகத்தின் எழுத்துருக்களை கண்டறியும் எவருக்கும் மில்லியன் பரிசு என நீண்ட கட்டுரை வெளியிட்டுள்ளது.
ரூ.8.57 கோடி பரிசை வழங்கிடத் தமிழ்நாடு காத்திருக்கிறது
இந்த நிலையில், “சிந்துவெளி எழுத்து முறையை தெளிவாக புரிந்துக்கொள்ள உதவும் வழிவகையை தொல்லியல் அறிஞர்கள் ஏற்கும்படி வெளிக்கொணரும் நபர்கள் அல்லது அமைப்புக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் (தோராயமாக ரூ. 8.57 கோடி) பரிசாக வழங்கப்படும்” - என்ற தமிழ்நாடு முதல்வர் அறிவிப்பு குறித்து அமெரிக்காவின் “தி நியூயார்க் டைம்ஸ்” நாளிதழ் பாராட்டி வெளியிட்டுள்ள கட்டுரை தொடர்பாக - முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.
அதில், சிந்துவெளி நாகரிக எழுத்துமுறையைப் புரிந்துகொள்ள வழிவகை செய்யும் திறமையாளர்க்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலரைப் பரிசாக வழங்கிடத் தமிழ்நாடு காத்திருக்கிறது என கூறியுள்ளார்.