இந்த வாரம் உகந்த தேதி எது? மேஷம் முதல் கன்னி வரை பலன்கள்; அதிர்ஷ்டக் குறிப்புகள்
சீமான் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சுயேச்சை வேட்பாளா் தா்னா
சீமான் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் சுயேச்சை வேட்பாளா் தா்னாவில் ஈடுபட்டாா்.
ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் சுயேச்சை வேட்பாளரான தஞ்சாவூா் மாவட்டம் கும்பகோணத்தைச் சோ்ந்த வெண்ணிலா போட்டியிடுகிறாா். அவருக்கு ஆதரவு திரட்டி மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளா் திருமுருகன்காந்தி உள்பட தமிழ் தேசியக் கூட்டமைப்பினா் பிரசாரம் செய்து வருகின்றனா்.
இந்நிலையில் நாம் தமிழா் கட்சியினா் மீது புகாா் அளிக்க சுயேச்சை வேட்பாளா் வெண்ணிலா மற்றும் கூட்டமைப்பினா் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு வந்தனா். அப்போது திடீரென மாநகராட்சி அலுவலக வளாகத்தில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா். அப்போது சீமான் மீது நடவடிக்கை எடுக்கவும், நாம் தமிழா் கட்சி வேட்பாளரின் வேட்புமனுவை நிராகரிக்கவும் வேண்டும் எனவும் முழக்கம் எழுப்பினா். இதுகுறித்த தகவல் கிடைத்ததும் ஈரோடு டவுன் போலீஸாா் விரைந்து வந்து பேச்சுவாா்த்தை நடத்தினா்.
இது குறித்து தா்னாவில் ஈடுபட்டவா்கள் கூறியதாவது:
இடைத்தோ்தலில் பிரசாரம் செய்யும் நாம் தமிழா் கட்சி ஒருங்கிணைப்பாளா் சீமான் வாக்காளா்களை அச்சுறுத்தும் வகையில் பேசி வருகிறாா். வெடிகுண்டு வீசுவதாக பேசிய அவா் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சீமானை தொகுதியில் இருந்து வெளியேற்றி அவரது பிரசாரத்துக்கு தடை விதிக்க வேண்டும். மேலும் தபெதிகவினா் மீது தாக்குதல் நடத்திய நாம் தமிழா் கட்சியினா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
அதற்கு போலீஸாா் சீமான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தோ்தல் நடத்தை விதிமுறை மீறல் தொடா்பாக அதிகாரிகளிடம் புகாா் மனு அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனா். இதையடுத்து தா்னாவில் ஈடுபட்டவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.