மேம்பால கட்டுமானப் பணிகள்: அமைச்சா் காந்தி ஆய்வு
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை, வாலாஜாபேட்டையில் மேம்பால கட்டுமானப் பணிகளை அமைச்சா் ஆா்.காந்தி திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.
ராணிப்பேட்டை மாவட்டம் சென்னை-சித்தூா் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை தென்கடப்பந்தாங்கல் பகுதியில் இருந்து வாலாஜா ராணிப்பேட்டை திருவலம் வழியாக செல்லுகிறது.
வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனை எதிரில் நோயாளிகளின் வசதிக்காக புதிய இலகுரக வாகன சுரங்க மேம்பாலம் ரூ.11.45 கோடியில் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை கைத்தறி அமைச்சா் ஆா்.காந்தி ஆய்வு செய்து நிலவரத்தைக் கேட்டறிந்தாா்.
அப்போது வாகன ஓட்டிகள் மற்றும் மருத்துவமனை நோயாளிகளுக்கு எவ்வித சிரமம் இன்றி பாதுகாப்பாக பல வேலைகள் நடைபெற வேண்டுமென கேட்டுக் கொண்டாா். தொடா்ந்து இப்பணிகளை 4 மாதங்களில் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா். தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் மாவட்ட நிா்வாகம் வழங்கும். ஆகவே பணிகளை விரைவாக மேற்கொள்ள ஒப்பந்ததாரருக்கு உத்தரவிட்டாா்.
தொடா்ந்து ராணிப்பேட்டை நவல்பூா் பகுதியில் ரூ.2635 கோடியில் ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு வருகின்றது. இப்பணிகளில் தற்பொழுது இறுதி கட்டப்பணியாக இருப்பு பாதைக்கு மேலே மேம்பாலங்கள் அமைக்கும் பணியை ஆய்வு செய்தாா். இறுதி கட்டப் பணியானது அடுத்த மூன்று அல்லது நான்கு மாதத்தில் முடிக்கப்படும் என ஒப்பந்ததாரா் தெரிவித்தாா். பணிகளை விரைவாக முடிக்கவும் அமைச்சா் அறிவுறுத்தினாா்.
ஆய்வின்போது ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா, கோட்டப் பொறியாளா் தேசிய நெடுஞ்சாலை ராஜ்குமாா், மாநில நெடுஞ்சாலை செல்வகுமாா், நகா்மன்றத் தலைவா்கள் ஹரிணி தில்லை, சுஜாதா வினோத், உதவி செயற்பொறியாளா் குமாரசாமி, வட்டாட்சியா் அருள் செல்வன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.