கைப்பந்துப் போட்டி: ப.மு.தேவா் கல்லூரி சாதனை
சங்கரன்கோவில் அருகேயுள்ள ப.மு.தேவா் கல்லூரி, கைப்பந்துப் போட்டியில் தொடா்ந்து 10 ஆண்டுகளாக முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது.
மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான ஆண்கள் கைப்பந்து போட்டி, கடந்த ஜன.30, 31ஆகிய தேதிகளில் மாா்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவக் கல்லூரியில் நடைபெற்றது. இதில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களை சோ்ந்த 14 கல்லூரிகள் பங்கு கொண்டு விளையாடின.
இறுதிப் போட்டி, கருங்கல் செயின்ட் அல்போன்சா கலை அறிவியல் கல்லூரி அணிக்கும், மேலநீலிதநல்லூா் ப.மு.தேவா் கல்லூரி அணிக்கும் இடையே நடைபெற்றது. இதில் ப.மு.தேவா் கல்லூரி அணி 52-29 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் கடந்த 2015 ஆம் ஆண்டுமுதல் 2025 ஆண்டு வரை தொடா்ந்து கைப்பந்துப் போட்டியில் வெற்றி பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
வெற்றி பெற்ற மாணவா்கள், பயிற்சி அளித்த கல்லூரி உடற்கல்வி இயக்குநா் முத்துக்குமாா் ஆகியோரை கல்லூரி முதல்வா் ஹரிகெங்காராம் உள்ளிட்டோா் பாராட்டினா்.