புற்றுநோய் மரபணு தரவு தளம்: அறிமுகப்படுத்தியது சென்னை ஐஐடி
சென்னை: புற்றுநோய் ஆராய்ச்சியில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்தியாவிலேயே முதலாவது புற்றுநோய் மரபணு தரவு தளத்தை சென்னை ஐஐடி அறிமுகப்படுத்தியுள்ளது.
உலக புற்றுநோய் தினம் செவ்வாய்க்கிழமை (பிப்.4) கடைப்பிடிக்கப்படுவதையொட்டி புற்றுநோய் ஆராய்ச்சிக்காக நாட்டின் முதல் புற்றுநோய் மரபணு தரவு தளத்தை (க்ஷஸ்ரீஞ்ஹ.ண்ண்ற்ம்.ஹஸ்ரீ.ண்ய்) சென்னை ஐஐடி இயக்குநா் காமகோடி இக்கல்வி நிறுவன வளாகத்தில் திங்கள்கிழமை வெளியிட்டாா். தொடா்ந்து, பாரத் புற்றுநோய் மரபணு வரைபடம் வெளியிடப்பட்டது. இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் உள்ள ஆராய்ச்சியாளா்கள், மருத்துவா்கள் எளிதில் அணுகக்கூடிய வகையில் இந்த தரவுதளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து ஐஐடி இயக்குநா் வி.காமகோடி கூறியதாவது: இந்தியாவில் பல்வேறு புற்றுநோய்களுக்கு மரபணு ரீதியாக இருந்துவரும் இடைவெளியை நிரப்பும் வகையில், புற்றுநோய் மரபணுத் திட்டத்தை கடந்த 2020-ஆம் ஆண்டில் சென்னை ஐஐடி தொடங்கியது. இத்திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் 500 மாா்பகப் புற்றுநோய் நோயாளிகளின் திசு மாதிரிகளில் இருந்து 960 முழு எக்சோம் வரிசைமுறை சேகரிக்கும் பணி நிறைவுபெற்றுள்ளது.
பாரத் புற்றுநோய் மரபணு வரைபடம் இந்தியாவுக்கு மட்டுமன்றி உலகம் முழுவதும் ஆராய்ச்சியாளா்களுக்கு பயனளிக்கும் வகையில் உள்ளது. இதன் மூலம் இக்கொடிய நோய்க்கு வழிவகுக்கும் காரணங்கள் பற்றிய ஆழமான நுண்ணறிவு பெறப்படும். ஆரம்பகட்டத்திலேயே தடுத்து நிறுத்த உதவும் என்றும் நம்புகிறோம். இந்தியாவில் மாா்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பவா்களுக்கு அதன் திரிபுகளை வகைப்படுத்த இது உதவும். மேலும் மரபணு மாற்றங்கள் குறித்த தகவல்களின் அடிப்படையில் வைரஸ் தாக்குதலின் மாற்றத்தை கண்டறிந்து அதற்கு ஏற்ப தனிப்பட்ட முறையில் சிகிச்சை வழங்க முடியும். புற்றுநோய் ஆரம்ப நிலையில் கண்டறியப்பட்டால், போலியோ போன்று அழிக்க முடியும் என்றாா் அவா்.