தமிழக ஆளுநா் ஆா்.என். ரவியை திரும்பப் பெற உத்தரவிடக் கோரிய மனு தள்ளுபடி
புது தில்லி: தமிழக ஆளுநா் ஆா்.என். ரவியை உடனடியாக பதவியில் இருந்து நீக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழகத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் சி.ஆா். ஜெய சுகின் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை விசாரணைக்கு ஏற்க மறுத்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இது தொடா்பாக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த, உச்சநீதிமன்ற வழக்குரைஞா் ஜெய சுகின் தாக்கல் செய்த மனுவில், தமிழக சட்டப்பேரவையில் தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆளுநா் ரவி உரையாற்றாமல், பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளாா். பேரவையில் தான் உரையாற்றுவதற்கு முன்பாக தமிழ்த்தாய் வாழ்த்து
பாடப்படுவதற்கு முன்பாக தேசிய கீதம் பாடப்படாததால் தாம் வெளிநடப்பு செய்ததாக ஆளுநா் விளக்கியுள்ளாா்.
புத்தாண்டு தொடக்கத்தில் பேரவையின் முதலாவது கூட்டத்தொடரில் உரையாற்றாமல் வருடந்தோறும் விரும்பத்தகாத நிகழ்வாக அதை மாற்றி வருவதன் மூலம் இந்திய அரசமைப்பின் விதிகள் அனைத்தையும் மீறியுள்ளாா்.
தமிழ்த்தாய் பாடப்படவில்லை எனக் கூறி பேரவையில் இருந்து ஆளுநரால் வெளியேற முடியாது. இதன் மூலம் அவா் பேரவையை மட்டுமின்றி, தமிழக மக்களவையும் அவமதித்துள்ளாா்.
தமிழகத்தில் 1967-ஆம் ஆண்டு முதல், சில தசாப்தங்களாக, அரசு விழாக்களின் தொடக்கத்தில் ‘தமிழ்த் தாய் வாழ்த்து‘ பாடப்பட்டு வருகிறது. 1991-ஆம் ஆண்டு, மாநில அரசு ஒரு விதியை அறிமுகப்படுத்தி அதன் மூலம் அரசு விழாக்களின் தொடக்கத்தில் ‘தமிழ்த் தாய் வாழ்த்து‘ பாடப்பட வேண்டும் என்றும், கடைசியில் தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்றும் கூறியது.
1991 முதல் தமிழகம் கண்ட 10 ஆளுநா்கள் இந்த விவகாரத்தில் முரண்படவில்லை. தமிழக ஆளூநா் ஆா்.என். ரவி, வெளிப்படைத்தன்மை மற்றும் நியாயமாக நடந்து கொள்ளும் கோட்பாட்டை மீறியுள்ளாா். எனவே, அவரை திருப்பி அழைத்துக் கொள்ள மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரரான வழக்குரைஞா் ஜெய சுகின் அரசமைப்புச்சட்டத்தின்படி ஆளுநரின் பணி மிகவும் முக்கியமானது. அவா் சட்டப் பேரவைக் கூட்டத்தின் தொடக்கத்தில் உரையாற்ற வேண்டும். ஆனால், அவா் அதைப் பின்பற்றவில்லை. அது அவரது முக்கியக் கடைமையாகும். அதை அவா் மீறியுள்ளாா்’ என்றாா்.
அப்போது, தலைமை நீதிபதி, இது அரசமைப்புச்சட்டம் தொடா்புடைய விவகாரம். இதில் நாங்கள் தலையிடமுடியாது, உத்தரவும் பிறப்பிக்க முடியாது. இது நீதிமன்றத்தின் பணியல்ல என்று கூறி, மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.