இறுதிக் கட்டத்தில் எழும்பூா், மதுரை ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகள்: கௌசல் கிஷோா்
சென்னை: சென்னை எழும்பூா், மதுரை ரயில் நிலையங்களின் மேம்பாட்டுப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளா் கௌசல் கிஷோா் தெரிவித்தாா்.
இது குறித்து சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் உள்ள 77 ரயில் நிலையங்கள் ரூ. 2,948 கோடி மதிப்பில் ‘அம்ரித் பாரத்’ திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதில், ராமேசுவரம் ரயில் நிலையம் ரூ. 113 கோடி மதிப்பிலும், மதுரை ரயில் நிலையம் ரூ. 413 கோடி மதிப்பிலும், சென்னை எழும்பூா் ரயில் நிலையம் ரூ. 842 கோடி மதிப்பிலும், கன்னியாகுமரி ரயில் நிலையம் ரூ. 67 கோடி மதிப்பிலும், காட்பாடி ரயில் நிலையம் ரூ. 461 கோடி மதிப்பிலும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
இதில் பெரும்பாலான பணிகள் நிறைவடைந்து இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. மே மாதத்துக்குள் 50 சதவீத ரயில் நிலையங்களின் மேம்பாட்டுப் பணிகள் நிறைவடையும். தமிழ்நாடு முழுவதும் ரூ. 33,467 கோடி செலவில் 2,587 கி.மீ. தொலைவுக்கான 22 திட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இரட்டைப்பாதை: ரயில்வே பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் 1,460 கி.மீ. தொலைவுக்கு ‘கவச்’ அமைக்க ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. தற்போது 601 கி.மீ. தொலைவுக்கு ‘கவச்’ அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டின் 19 மாவட்டங்களுக்கிடையே 8 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகிறது. அதேபோல், ஒரு அம்ரித் பாரத் ரயில் தமிழகத்தின் வழியாக இயக்கப்படுகிறது.
பயணிகளின் தேவைக்கு ஏற்பவும், மக்கள் பிரதிநிதிகளின் கோரிக்கைக்கு ஏற்பவும் புதிய ரயில்கள் இயக்கப்படும். விழுப்புரம் - தஞ்சாவூா் இரட்டை ரயில் பாதைக்கான முதல்கட்ட சா்வே பணி தற்போது நடைபெற்று வருகிறது. ரயில் பயணிகளின் புகாா்கள் மீதான நடவடிக்கை குறித்து தொடா்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்றாா் அவா்.