Kalpana Nayak: ``கல்பானா நாயக் உயிருக்கு எந்தவித அச்சறுத்தலும், ஆபத்தும் இல்லை'' -டிஜிபி விளக்கம்
கடந்த ஆண்டு சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைய தலைமையகத்தை (USRB) கல்பனா நாயக் அடைவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பு, அவரது அறையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து கல்பனா நாயக், "என் அறையை சென்று பார்த்தபோது மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். சற்று விரைவாக என் அறைக்கு நான் சென்றிருந்தால், நான் உயிரிழந்திருப்பேன். முறைகேடுகள் குறித்து நான் வெளிப்படுத்திய சில நாள்களில் இந்த விபத்து அரங்கேறியுள்ளது" என்று புகார் தெரிவித்திருந்தார்.
இந்த தீ விபத்து காவல்துறை உதவி ஆய்வாளர் மற்றும் பிற பணிகளுக்கான நியமனங்களில் இட ஒதுக்கீட்டை பின்பற்றுவதில் நடந்த முறைகேடுகளை அம்பலப்படுத்தியதால் வந்த கொலை முயற்சியாக இருக்கலாம் என்று குற்றம் சாட்டியிருந்தார். ஆனால், ஏர் கண்டிஷனிங் சிஸ்டத்தில் ஏற்பட்ட ஷார்ட் சர்க்யூட் அல்லது மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகக் காவல்துறைத் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் காவல்துறையின் முக்கியப் பொறுப்பில் இருக்கும் பெண் ஏடிஜிபியின் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டிருப்பதும், அவருக்கு நடந்த தீ விபத்து சம்பவத்தில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பதும்தான் இப்போது அரசியல் சர்ச்சைகள் வெடிப்பதற்குக் காரணமாகியிருக்கிறது.
எதிர்க்கட்சித் தலைவர் அ.தி.மு.க எடப்பாடி பழனிச்சாமி, பா.ம.க நிறுவனர் ராமதாஸ், அண்ணாமலை உள்ளிட்டோர், 'பெண் ஏடிஜிபி கல்பனா நாயக்கை படுகொலை செய்ய சதி நடந்ததாக கூறப்படுவது குறித்து சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும்' என்று வலியிறுத்தி, தி.மு.க அரசைக் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இன்று (பிப் 3) இந்த சர்ச்சை அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக நிலையில், டிஜிபி அலுவலகம், "14.8.2024ஆம் தேதி அன்று கல்பனா ஐபிஎஸ் இடமிருந்து புகார் கடிதம் பெறப்பட்டது. அதன் அடிப்படையில் உடனே அந்த தீ விபத்து சம்பவம் குறித்து முழு தீவிரத்துடன் விசாரணை நடத்தப்பட்டது. கூடுதல் டிஜிபி கல்பானா நாயக் உயிருக்கு எந்தவித அச்சறுத்தலும், ஆபத்தும் இல்லை. அவரது அறையில் ஏற்பட்ட தீ விபத்து மின்கசிவால் ஏற்பட்டிருப்பதும், மின்கசிவு ஏற்பட்ட காப்பர் மின்கம்பியின் தடையங்களே அங்கு இருந்ததும் தெரியவந்தது. அந்த தீ விபத்தை யாரேனும் ஏற்படுத்தியதற்கான முகாந்திரங்கள் ஏதுமில்லை. வேண்டுமென்றே தீ விபத்தை ஏற்படுத்திய செயல் ஏதும் அந்த விபத்தில் இல்லை" என்று மறுப்புத் தெரிவித்திருக்கிறது. சீரூடை பணியாளர் சீருடை பணியாளர் தேர்வாணையமும், "ஏடிஜிபி கல்பானா நாயக் புகாரில் உண்மையில்லை" என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.