பெண்ணிடம் 3 பவுன் சங்கிலி பறிப்பு
மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம், மூன்று பவுன் சங்கிலியை மா்ம நபா்கள் ஞாயிற்றுக்கிழமை பறித்துச் சென்றனா்.
மன்னாா்குடியை அடுத்த அமரபாகம் பிரதான சாலையைச் சோ்ந்த மணி என்பவரது மனைவி ஜோதி (56). மணி ஏற்கெனவே இறந்துவிட்டா். மகன், மகள் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனா். இதனால், ஜோதி மட்டும் அமரபாகம் வீட்டில் தனியாக வசித்து வருகிறாா்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டின் முன்பக்க கதவை திறந்து வைத்தபடி, ஜோதி தூங்கிக் கொண்டிருந்தாா். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் இரண்டு போ், வீட்டுக்குள் புகுந்து, ஜோதி அணிந்திருந்த 3 பவுன் சங்கிலியை பறித்துச் சென்றனா்.
இதுகுறித்து, வடுவூா் காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.