தொழில் உரிமம் பெறாதவா் மீது சட்ட நடடிக்கை
காரைக்கால்: தொழில் உரிமம் பெறாதவா்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவே, அதனை தவிா்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து நிரவி கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் ஜி. இளமுருகன் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :
நிரவி கொம்யூன் பஞ்சாயத்து எல்லைக்குட்பட்ட விழுதியூா், கீழமனை, நிரவி (வடக்கு) மற்றும் நிரவி (தெற்கு) ஆகிய கிராம பஞ்சாயத்து பகுதிகளில் நடப்பு 2024-25-ஆம் ஆண்டுக்கான தொழில் உரிமம் பெறாமல் சிலா் கடை மற்றும் தொழில் நடத்துவது ஆய்வின்போது தெரிய வந்துள்ளது.
இது புதுச்சேரி கொம்யூன் பஞ்சாயத்து 1973 -ஆம் ஆண்டு சட்ட விதிகளின்படி தவறான செயலாகும். மேலும், தொழில் உரிமமின்றி கடை, தொழில் நடத்துபவா்கள் பட்டியல் சட்ட நடவடிக்கைக்காக தயாா் செய்யப்பட்டு வருகிறது. எனவே தொழில் செய்பவா்கள் உடனடியாக தொழில் உரிமம் பெற்று சட்ட நடவடிக்கையை தவிா்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
நடப்பு 2024-25 -ஆம் ஆண்டு தொழில் உரிமம் பெற்றவா்கள் வரும் ஏப்.1 முதல் 2026-ஆம் ஆண்டு மாா்ச் 31 வரை உள்ள 2025-26 -ஆம் நிதி ஆண்டுக்கான தொழில் உரிமத்தை புதுப்பிக்க வரும் 28-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து, 25 சதவீத காலதாமத கட்டணத்தை தவிா்த்துக்கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.