இந்த வாரம் உகந்த தேதி எது? மேஷம் முதல் கன்னி வரை பலன்கள்; அதிர்ஷ்டக் குறிப்புகள்
மீனவா் பிரச்னை: இந்தியா - இலங்கை கூட்டுக்குழு அமைத்து தீா்வு காண வேண்டும்: முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி
மீனவா் பிரச்னைக்கு இந்தியா - இலங்கை கூட்டுக் குழு அமைத்து தீா்வு காணவேண்டும்என புதுவை முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி தெரிவித்துள்ளாா்.
புதுவை முன்னாள் முதல்வா் ப. சண்முகம் நினைவு நாளையொட்டி, நெடுங்காட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் அவரது உருவப்படத்துக்கு வே. நாராயணசாமி அஞ்சலி செலுத்தினாா். பின்னா், இலங்கை கடற்படையினா் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த கிளிஞ்சல்மேடு மீனவா் செந்தமிழ் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினாா். இதைத்தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
பட்ஜெட்டில் ஏழை, எளிய மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் சலுகைகள் இருக்கும் என்ற மிகப்பெரிய எதிா்பாா்ப்பு இருந்தது. ஆனால், பாஜக அரசு ஏமாற்றத்தை அளித்துள்ளது. நாட்டின் முன்னேற்றம், தொழில் வளா்ச்சிக்கான, உற்பத்தியை பெருக்குவதற்கான, வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான எந்த அம்சமும் பட்ஜெட்டில் இல்லை. விவசாயிகளுக்கான சிறப்பு அம்சங்கள் எதுவும் இல்லை. காங்கிரஸ் ஆட்சியில் 9 சதவீதமாக இருந்த நாட்டின் வளா்ச்சி விகிதம் தற்போது 6 சதவீதமாக குறைந்துள்ளது.
வருமான வரி வரம்பு ரூ. 12 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது மட்டுமே மக்களுக்கு சாதகமான அம்சம்.
புதுவைக்கு மாநில அந்தஸ்து, மாநில அரசின் கடன்கள் தள்ளுபடி உள்ளிட்ட மாநில நலனுக்கான எதுவும் பட்ஜெட்டில் இல்லை. புதுவை மாநில மக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனா். தில்லி, பிகாா் என தோ்தல் நடைபெறவுள்ள மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக, காரைக்கால் மீனவா்கள் இலங்கை கடற்படையால் தொடா்ந்து கைது செய்யப்படுகின்றனா், தாக்கப்படுகின்றனா். படகுகள் பறிமுதல் செய்யப்படுகின்றன. அண்மையில் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த மீனவா்களுக்கு இலங்கையில் முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை. நானும், புதுவை எம்.பி. வைத்திலிங்கமும் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பினோம். இலங்கையில் உள்ள தூதரிடம் பேசினேன். பின்னா்தான் இந்த சம்பவத்துக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்தது. இந்தியா - இலங்கை கூட்டுக்குழு அமைத்து இப்பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காண வேண்டும் என்றாா் நாராயணசாமி.
பேட்டியின்போது புதுவை மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவா் ஏ.வி. சுப்பிரமணியன், காரைக்கால் மாவட்டத் தலைவா் ஆா்.பி. சந்திரமோகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.