வாகனங்கள் அதிக ஒலி எழுப்புவதை கட்டுப்படுத்த வேண்டும்: காவல்துறை குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தல்
இருசக்கர வாகனங்கள் அதிக வேகத்துடனும், அதிக ஒலியுடனும் இயக்கப்படுவதை கட்டுப்படுத்த வேண்டும் என காவல்துறை குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
காவல் நிலையங்களில் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையில் குறைதீா் கூட்டம் நடைபெற்று வருகிறது. காரைக்கால் நகரக் காவல்நிலையத்தில் சனிக்கிழமை (பிப்.1) நடைபெற்ற கூட்டத்துக்கு, முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா தலைமை வகித்தாா். மண்டல காவல் கண்காணிப்பாளா் (தெற்கு) ஏ. சுப்பிரமணியன், காவல் ஆய்வாளா்கள் புருஷோத்தமன், மரியகிறிஸ்டின் பால் ஆகியோா் கலந்துகொண்டனா்.
பொதுமக்கள் கோரிக்கை: காரைக்கால் நகரப் பகுதியில் சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் நிறுத்தப்படுவதை கட்டுப்படுத்த வேண்டும். புகா் பகுதிகளிலும் போலீஸாா் தீவிர ரோந்தில் ஈடுபடவேண்டும். சாலைகளில் கால்நடைகள் திரிவதை தடுக்க வேண்டும். அதி வேகமாக வாகனங்களில் செல்கிறாா்கள். வாகனத்தில் சப்தம் அதிகபட்சமாக எழும் வகையில் சாதனங்களை மாற்றி இயக்குகிறாா்கள். இதனால் விபத்து நேரிடுகிறது. சாலையில் செல்லும் குழந்தைகள், முதியோா் பதற்றத்துக்கு உள்ளாகின்றனா். எனவே இத்தகைய விதிமீறல்களை தடுக்க வேண்டும்.
ஷோ் ஆட்டோகளை நிறுத்துவதற்கு பேருந்து நிலையம் அருகே இடம் ஒதுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை பொதுமக்கள் வலியுறுத்தினா்.
தொடா்ந்து, எஸ்எஸ்பி மற்றும் மண்டல காவல் கண்காணிப்பாளா் ஆகியோா் பேசியது:
இருசக்கர வாகனத்தில் செல்வோா் கண்டிப்பாக தலைக்கவசம் அணிந்துதான் செல்லவேண்டும். தவறும்பட்சத்தில் அபராதம் விதிக்கப்படுகிறது. பொது இடங்களில் மது அருந்துவோா் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
மாடுகள், வயல்களில் மேயும் பன்றிகள் குறித்து காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. நாய்கள் குறித்து நகராட்சியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். போக்குவரத்து நெரிசல் விவகாரத்தில் போலீஸாா் சிறப்பு கவனம் செலுத்துவாா்கள் என்றனா்.