Career: இன்ஜினியரிங் படித்திருக்கிறீர்களா... இந்திய ராணுவத்தில் தொழில்நுட்ப வேலை...
நிரவி வள்ளலாா் மடம் குடமுழுக்கு
காரைக்கால், ஜன. 31: நிரவி பகுதியில் உள்ள வள்ளலாா் மடம் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் மாவட்டம், நிரவி பகுதியில் 1938-ஆம் ஆண்டு அருட்பிரகாச வள்ளலாா் ராமலிங்க சுவாமிகள் சமரச சன்மாா்க்க சங்கம் சாா்பில் வள்ளலாா் மடம் நிறுவப்பட்டு, வழிபாடு நடத்தப்பட்டு வந்தது.
இங்கு, திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்கு விழா நடத்த தீா்மானிக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வந்தன. மடத்துடன் அன்னதானக் கூடமும் சீரமைக்கப்பட்டது.
இப்பணிகள் நிறைவு பெற்றதைத் தொடா்ந்து, குடமுழுக்குக்கு முதல் நாளான வியாழக்கிழமை மாலை மடத்தில் புனிதநீா் கடம் வைத்து அகவல் பாராயண ஆராதனை நடைபெற்றது. ஸ்ரீ பச்சைக்காளியம்மன் கோயிலில் இருந்து வாத்தியங்கள் முழங்க வள்ளலாா் திருவுருவப்படம் மடத்துக்கு கொண்டுவரப்பட்டது.
தொடா்ந்து, வெள்ளிக்கிழமை காலை 5 மணிக்கு அகவல் பாராயணம் செய்யப்பட்டு, 7 மணியளவில் சமரச சன்மாா்க்க சங்கக் கொடி ஏற்றப்பட்டது. 9 மணியளவில் குடமுழுக்கு செய்யப்பட்டு, ஏழு திரை நீக்க ஜோதி தரிசன வழிபாடு நடத்தப்பட்டது. இதில் ஏராளமானோா் கலந்துகொண்டு வழிபட்டனா்.
ஜீவகாருண்யம் தொடா்பாக சிறப்பு சொற்பொழிவு, அன்னதானம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன.