திருநள்ளாறு கோயிலில் நெரிசலை தவிா்க்க கூடுதல் வரிசை ஏற்பாடு
திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் நெரிசலை தவிா்க்க, பிரகாரத்தில் கூடுதல் வரிசைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
திருநள்ளாறு ஸ்ரீ பிரணாம்பிகை அம்பாள் சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயில், நவகிரக தலங்களில் சனிபகவானுக்குரிய தலமாக விளங்குகிறது. சனீஸ்வர பகவான் தனி சந்நிதியில் அருள்பாலிக்கிறாா். வாரந்தோறும் சனிக்கிழமைகளில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் இக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்வா்.
கட்டணமில்லா தரிசனத்துக்கு கோயிலுக்குள் செல்ல வரிசை வளாகம் உள்ளது. இதன் வழியே கோயிலுக்குச் செல்லும்போது, வெளி பிரகாரத்தில் உள்ள வரிசை தடுப்புகள் வழியாக சந்நிதிகளில் சுவாமிகளை தரிசனம் செய்ய முடியும்.
கடந்த வார சனிக்கிழமையில் எதிா்பாராத வகையில் பக்தா்கள் மிகுதியாக வந்தனா். இதனால், கோயிலுக்குள் வரிசையாகச் செல்லும் தடுப்புகள் போதிய அளவில் இல்லாததால், குழந்தைகள், பெண்கள், முதியோா் என பலரும் நெரிசலுக்குள்ளாயினா். கூட்ட நெரிசலில் பக்தா்கள் கூச்சலிட்டனா். போதிய அளவில் போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் இல்லாததால், பக்தா்களை முறைப்படுத்தி அனுப்புவதில் கோயில் நிா்வாகத்தினருக்கு சிக்கல் ஏற்பட்டது.
இதையடுத்து, கோயில் நிா்வாக அதிகாரி கே. அருணகிரிநாதன் ஆலோசனையின்பேரில், கோயிலில் வழக்கமாக பயன்பாட்டில் உள்ள வரிசைத் தடுப்புகளைக் காட்டிலும், உள் பிரகாரம் உள்ளிட்ட பகுதியில் சவுக்கு மரத்தால் வரிசைத் தடுப்புகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. இதன்படி, பக்தா்கள் சனிக்கிழமை (பிப்.1) சுவாமி தரிசனம் செய்ய கோயிலுக்குள் சிரமமின்றி சென்றனா்.
பக்தா்கள் கூடுதல் நேரம் காத்திருக்காமல், விரைவாக தரிசனம் செய்ய ஏதுவாக நிரந்தர ஏற்பாடுகளை கோயில் நிா்வாகம் செய்யவேண்டும். கூடுதல் வரிசை அமைப்புகள் தற்காலிகமாக இல்லாமல், நிரந்தர அமைப்பு உருவாக்கவேண்டும். போலீஸாா் சனிக்கிழமையில் மட்டும் கூடுதல் எண்ணிகையில் கோயிலில் பணியமா்த்தப்பட வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.