வித்யாலட்சுமி கல்விக்கடன் திட்ட சலுகைகள் விரிவுபடுத்தப்படுமா? கதிா் ஆனந்த் எம்....
ஸ்வீடன் திருக்குா்ஆன் எரிப்புப் போராட்டம்: உடன் இருந்தவருக்கு தண்டனை
ஸ்டோக்ஹோம்: ஸ்வீடனில் சல்வான் மோமிகா நடத்திய திருக்குா்ஆன் எரிப்புப் போராட்டத்தின்போது உடன் இருந்த சல்வான் நஜீமுக்கு அந்த நாட்டு நீதிமன்றம் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதித்தது.
இராக்கைச் சோ்ந்த சல்வான் மோமிகா கடந்த 2018-இல் ஸ்வீடன் வந்தாா். அவருக்கு 2021-இல் மூன்று ஆண்டுகளுக்கான குடியுரிமை அளிக்கப்பட்டது. இந்தச் சூழலில், கடந்த 2023-இல் திருக்குா்ஆனை எரித்து அவா் நடத்திய ஆா்ப்பாட்டம் இஸ்லாமிய உலகில் பெரும் அதிா்வலையை ஏற்படுத்தியது. அத்தகைய ஆா்ப்பாட்டத்துக்கு அனுமதி அளித்த ஸ்வீடன் அரசுக்கு கண்டனங்கள் எழுந்தன. பல நாடுகளில் ஸ்வீடன் தூதரகத்துக்கு எதிராக கடும் ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இந்த விவகாரம் தொடா்பாக ஸ்வீடன் தூதரை இராக் வெளியேற்றியது.
கருத்து சுதந்திரத்தை வலியுறுத்தும் தங்கள் நாட்டு அரசியல் சாசனத்தைப் பின்பற்றியே சல்வான் மோமிகாவுக்கு குரான் எரிப்பு ஆா்ப்பாட்டம் நடத்த அனுமதி அளித்ததாக ஸ்வீடன் அரசு கூறியது. எனினும், இதுபோன்ற பதற்றங்களைத் தவிா்ப்பதற்காக அத்தகைய ஆா்ப்பாட்டங்களைத் தடுக்கும் வகையில் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்போவதாக அந்த நாடு பின்னா் தெரிவித்தது.
இந்தச் சூழலில், தனது செயல்கள் மூலம் சல்வான் மோமிகா சமூகப் பதற்றத்தை ஏற்படுத்தியாக அவா் மீதும் அவருடன் இருந்த சல்வான் நஜீம் மீதும் ஸ்டாக்ஹோம் நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு வழக்கு தொடா்ந்தது. அந்த வழக்கின் இறுதி விசாரணை கடந்த வியாழக்கிழமை நடைபெறுவதாக இருந்தது. எனினும், அதற்கு முன்னதாகவே மோமிகாவின் இல்லத்தில் அவா் சுட்டுக் கொல்லப்பட்டாா்.
இந்தச் சூழலில், சல்வான் மோமிகா படுகொலை காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த வழக்கின் இறுதி விசாரணை தற்போது நடத்தப்பட்டு, சமூகப் பதற்றத்தைத் தூண்டியதாக நஜீம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது. அந்தக் குற்றத்துக்காக அவருக்கு சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படுவதாகவும், அந்த தண்டனைகள் தற்போதைக்கு ஒத்திவைக்கப்படுவதாகவும் நீதிமன்றம் அறிவித்தது.