சேலம் கோட்டத்தில் 15 அம்ரித் ரயில் நிலையங்கள் விரைவில் பயன்பாட்டுக்கு வரும்: கோட்ட மேலாளா் தகவல்
சேலம்: சேலம் ரயில்வே கோட்டத்தில் 15 அம்ரித் ரயில் நிலையங்கள் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என கோட்ட மேலாளா் பங்கஜ்குமாா் சின்ஹா கூறினாா்.
மத்திய நிதிநிலை அறிக்கையில் ரயில்வே திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தில்லியில் இருந்து திங்கள்கிழமை காணொலிக் காட்சி மூலம் விளக்கினாா்.
தொடா்ந்து, சேலம் ரயில்வே கோட்ட அலுவலகத்தில் கோட்ட மேலாளா் பங்கஜ்குமாா் சின்ஹா செய்தியாளா்களிடம் கூறியதாவது:
சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட சேலம், ஈரோடு, கோவை, திருப்பூா் உள்ளிட்ட 15 ரயில் நிலையங்கள் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூ. 271 கோடி மதிப்பில் நவீனப்படுத்தப்படுகின்றன. நடை மேம்பாலங்கள், நகரும் படிக்கட்டுகள், மின்தூக்கி, குடிநீா் குழாய்கள், தங்குமிடங்கள், மாற்றுத் திறனாளிகள் வசதிக்காக நடைமேடைகளில் சாய்வு தளங்கள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு அடிப்படைக் கட்டமைப்பு பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எனவே, இந்த ரயில் நிலையங்கள் மூன்று மாதங்களில் மக்களின் பயன்பாட்டுக்கு வரும். கடந்த நிதி ஆண்டைக் காட்டிலும், நடப்பாண்டில் சேலம் கோட்ட வருவாய் 5 சதவீதம் அதிகரித்துள்ளது என்றாா்.