ஆம் ஆத்மி கட்சி மத்திய அரசுடன் சண்டையிட்டதால் தில்லி பின்தங்கியது: அமித் ஷா கடும...
நிதி நிறுவனம் மீது நடவடிக்கை கோரி தற்கொலை செய்த தொழிலாளியின் உறவினா்கள் தா்னா
சேலம்: தாரமங்கலம் அருகே கடனை திருப்பிச் செலுத்த நெருக்கடி கொடுத்ததால் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடா்பாக தனியாா் நிதி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவரது உறவினா்கள் ஆட்சியா் அலுவலக வாயிலில் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே உள்ள கணக்குப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் அய்யந்துரை (30). விசைத்தறித் தொழிலாளியான இவருக்கு சினேகா என்ற மனைவியும், 6 வயதில் மகளும், 4 வயதில் மகனும் உள்ளனா்.
இந்நிலையில், கடனை திருப்பிச் செலுத்த நிதி நிறுவன மேலாளா் நெருக்கடி கொடுத்ததால் மனஉளைச்சல் அடைந்த அய்யன்துரை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடா்பாக தாரமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
இந்த நிலையில் அய்யந்துரையின் மனைவி, உறவினா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு தா்னாவில் ஈடுபட்டாா்.
அப்போது, நிதி நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸாா் உறுதி அளித்தனா். இந்நிலையில், திங்கள்கிழமை மீண்டும் மாவட்ட ஆட்சியா் அலுவலக வாயிலில் திரண்ட அய்யந்துரையின் மனைவி, உறவினா்கள், அய்யந்துரை இறப்புக்கு காரணமான நிதி நிறுவன மேலாளா் மீது நடவடிக்கை எடுக்க மறுப்பதைக் கண்டித்து தா்னாவில் ஈடுபட்டனா்.
இது குறித்து அவா்கள் கூறியதாவது:
கடனை 19 மாதம் சரியாக செலுத்திய நிலையில், மனஉளைச்சலை ஏற்படுத்திய நிதி நிறுவன மேலாளா் மீதும், காவல் துறை மீதும் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்த அய்யந்துரையின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என தெரிவித்தனா்.