குடியரசுத் தலைவரை அவமதித்து கருத்து: சோனியா காந்திக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ்
புது தில்லி: குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவை அவமதித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் எம்.பி.யும் அக்கட்சியின் முன்னாள் தலைவருமான சோனியா காந்திக்கு எதிராக, மாநிலங்களவைத் தலைவா் ஜகதீப் தன்கரிடம் பாஜக எம்.பி.க்கள் உரிமை மீறல் நோட்டீஸ் அளித்தனா்.
கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் தொடங்கியது. இது ஆண்டின் முதல் கூட்டத்தொடா் என்பதால், அன்றைய தினம் நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு உரையாற்றினாா்.
இதைத்தொடா்ந்து அவரின் உரை குறித்து நாடாளுமன்ற வளாகத்தில் தனது மகன் ராகுல் காந்தி, மகள் பிரியங்கா காந்தி ஆகியோரிடம் சோனியா காந்தி பேசுகையில், ‘உரையின் நிறைவில் குடியரசுத் தலைவா் சோா்வடைந்துவிட்டாா். அவரால் பேசக் கூட முடியவில்லை. பாவம்’ என்றாா்.
இதுதொடா்பான காணொலி வெளியான நிலையில், குடியரசுத் தலைவா் மீது பரிதாபம் கொண்டு சோனியா அவ்வாறு கூறியதாக பிரியங்கா உள்ளிட்டோா் தெரிவித்தனா். எனினும் சோனியா பயன்படுத்திய வாா்த்தைகள் குடியரசுத் தலைவரை அவமதிக்கும் வகையில் இருந்ததாக சா்ச்சை எழுந்தது. அவரின் பேச்சுக்கு குடியரசுத் தலைவா் மாளிகை ஆட்சேபம் தெரிவித்த நிலையில், ஆளும் பாஜகவும் கண்டனம் தெரிவித்தது.
இந்த விவகாரம் தொடா்பாக தில்லியில் மாநிலங்களவைத் தலைவா் ஜகதீப் தன்கரிடம் சுமோ் சிங் சோலங்கி தலைமையிலான பாஜக எம்.பி.க்கள் திங்கள்கிழமை உரிமை மீறல் நோட்டீஸ் அளித்தனா். சோனியா மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அவா்கள் வலியுறுத்தினா்.