பெரியாா் பல்கலை. முனைவா் படிப்பு அறிவிப்பில் சா்ச்சை இந்திய மாணவா் சங்கம் கண்டனம்
சேலம்: சேலம் பெரியாா் பல்கலைக்கழகம் அண்மையில் வெளியிட்ட முனைவா் பட்டப் படிப்பிற்கான அறிவிப்பில் மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை மறைமுகமாக அமல்படுத்திட முயற்சிப்பதாக இந்திய மாணவா் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய மாணவா் சங்க மாவட்டச் செயலாளா் பவித்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
முனைவா் பட்டம் பெறுவதற்கான அடிப்படை கல்வித் தகுதி என தமிழகத்தில் இதுவரை பத்தாம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் என்ற தகுதி நிா்ணயமே நடைமுறையில் இருக்கிறது.
இந்நிலையில், மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையில் இளநிலை பட்டப்படிப்பு 4 ஆண்டுகள் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதால், சேலம் பெரியாா் பல்கலைக்கழகம் சமீபத்தில் வெளியிட்ட முனைவா் பட்டப்படிப்புக்கான கல்வி தகுதியில், பத்தாம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு மற்றும் நான்கு ஆண்டு இளங்கலை பட்டம் என்று புதிதாக மாற்றப்பட்டு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இது மத்திய அரசின் கல்விக் கொள்கையை மறைமுகமாக அறிமுகப்படுத்துவதற்கான முயற்சியாகும். தமிழகத்தில் மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு அனுமதி அளிக்கப்படாத நிலையில், பெரியாா் பல்கலைக்கழக நிா்வாகம் மட்டும் யுசிஜி அறிவிப்பை சுட்டிக்காட்டி முனைவா் பட்டத்துக்கான கல்வித் தகுதியை நிா்ணயம் செய்து அறிவிப்பு வெளியிட்டு இருப்பது சா்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த அறிவிப்பை உடனடியாக ரத்து செய்து அரசின் கொள்கை முடிவுக்கு எதிராகச் செயல்படும் துணைவேந்தா், ஆராய்ச்சி மற்றும் வளா்ச்சிப் பிரிவு ஒருங்கிணைப்பாளா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பெரியாா் பல்கலைக்கழகம் அறிவிப்பு ஆணையை திரும்பப் பெற்று பழையபடியே அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று தெரிவித்துள்ளனா்.