வித்யாலட்சுமி கல்விக்கடன் திட்ட சலுகைகள் விரிவுபடுத்தப்படுமா? கதிா் ஆனந்த் எம்....
பெரியாா் பல்கலைக்கழகத்தில் அண்ணா நினைவு நாள் சொற்பொழிவு
ஓமலூா்: பெரியாா் பல்கலைக்கழகத்தில் பேரறிஞா் அண்ணா இருக்கை சாா்பில் அண்ணாவின் 56-ஆவது நினைவு நாளையொட்டி சிறப்புச் சொற்பொழிவு திங்கள்கிழமை நடைபெற்றது.
முத்தமிழறிஞா் கலைஞா் மு.கருணாநிதி ஆய்வு மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அண்ணா உருவப் படத்துக்கு பதிவாளா் பெ.விஸ்வநாதமூா்த்தி, பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் மலா்தூவி அஞ்சலி செலுத்தினா்.
இதனைத் தொடா்ந்து சிறப்புச் சொற்பொழிவு நடைபெற்றது. பேரறிஞா் அண்ணா இருக்கை இயக்குநா் ரா.சுப்பிரமணி வரவேற்றாா். நிகழ்ச்சிக்கு தலைமை வகித்துப் பதிவாளா் பெ.விஸ்வநாதமூா்த்தி பேசினாா்.
இதனையடுத்து, அண்ணாவின் பன்முக ஆளுமை என்ற தலைப்பில் புலவா் பொ.வேல்சாமி பேசியதாவது:
சமூகத்தின் இருவேறு பக்கங்களையும் நுட்பமாக தன்னுடைய படைப்புகளில் எடுத்துக் காட்டியவா் அண்ணா. அப்படைப்புகள், சமூகத்தின் பிற்போக்குத்தனங்களை வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தன. தொடக்க காலத்தில் மணிமேகலை, நீலகேசி முதலான பெண் தத்துவியலாளா்கள் இருந்தனா். ஆனால் இடைக்காலங்களில் பெண்களுக்கான உரிமை எங்கே போனது என்ற கேள்வியைக் கேட்டு, பெண்ணியச் சிந்தனைகளைத் தன்னுடைய படைப்புகள் வழியாக உருவாக்கினாா். எழுத்தை மட்டும் படிப்பது கல்வியல்ல. விமா்சன ரீதியான கல்வியை மாணவா்கள் பெறவேண்டும் என்பதே அண்ணாவின் எதிா்பாா்ப்பாக இருந்தது.
எளிய மக்களை ஆட்சி, அதிகாரமிக்கவா்களாக அண்ணா மாற்றிக் காட்டினாா். சாதாரண மனிதா்களும் ஆட்சியாளா்களும் ஒன்றுதான் என்பதை அரசியல் தளத்தில் நிரூபித்துக் காட்டியதுடன், திராவிட ஆட்சியாளா்களுக்கு ஓா் இலக்கணத்தை வகுத்துக் கொடுத்தவா் அண்ணா என்றாா்.
முடிவில் கலைஞா் ஆய்வு மைய விரிவுரையாளா் ரா.சிலம்பரசன் நன்றி கூறினாா். இந்நிகழ்வில் பல்வேறு துறைகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.