மீண்டும் ஒரே மேடையில் சந்தித்துக்கொண்ட பிக் பாஸ் பிரபலங்கள்!
`தெய்வம் தந்த பூவின் முகத்தில் மகிழ்ச்சி' நெகிழ்ந்த ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ்; கலங்கிய நாகை
கடந்த 2004ம் ஆண்டு சுனாமி பேரலையின் கோர தாண்டவத்தால் நாகப்பட்டினம் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டது. கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடி விட்டு வேளாங்கண்ணி கடற்கரையில் மகிழ்ச்சியாகத் திரிந்த பலர் சுனாமிக்கு பலியாகினர்.
பிள்ளைகளை, பெற்றோரை இழந்து பலர் நிர்கதியாகத் தவித்து நின்றனர். மாவட்டம் முழுவதும் கேட்ட அழுகுரல்கள் அடங்குவதற்கு நீண்ட நாட்கள் ஆகின.
இப்படியான சூழலில் சுனாமி அடித்த இரண்டாம் நாளில் கீச்சாங்குப்பம் கடற்கரையில் இரண்டு வயது பெண் குழந்தை அழுதுகொண்டும், இதேபோல் வேளாங்கண்ணியில் மற்றொரு பெண் குழந்தை பரிதவித்தும் நிற்க, இந்தக் குழந்தைகள் மீட்கப்பட்டு அப்போது நாகை மாவட்ட ஆட்சியராக இருந்த ராதா கிருஷ்ணனிடம் ஒப்படைத்தனர். ``பெற்றோரை இழந்த இந்தப் பிஞ்சுகள் மனசு எப்படித் துடிக்கும், அப்பாவா, அம்மாவா இருந்து நாமதான் இந்தக் குழந்தைகளை வளர்க்கவேண்டும்" என்ற ராதாகிருஷ்ணன், இரண்டு குழந்தைகளையும் அரசு அன்னை சத்யா ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் நேரடிக் கண்காணிப்பில் வைத்துப் பராமரிக்க உத்தரவிட்டார்.
வேளாங்கண்ணியில் கிடைத்த குழந்தைக்கு சௌமியா, கீச்சாங்குப்பத்தில் மீட்கப்பட்ட குழந்தைக்கு மீனா என்று பெயர் வைத்தார். இதேபோல் காப்பகத்தில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் மீது தனி கவனம் செலுத்தினார். பேரிடர் பாதிப்பு ஏற்பட்ட அந்த சமயத்தில் மாவட்ட ஆட்சியரான அவருக்கு கடுமையான பணி சூழல் இருந்த நிலையிலும் தினமும் காப்பகத்திற்குச் சென்று சௌமியா, மீனாவுடன் சேர்த்து அனைத்து குழந்தைகளையும் கவனித்து வந்தார். அவரின் மனைவி கிருத்திகாவும் இதைத் தொடர்ந்து செய்திருக்கிறார் என்கிறார்கள்.
அப்பா, அம்மா இல்லாத குறையை பெற்றோராக இருந்து இருவரும் போக்கினர். அந்தக் குழந்தைகளும் ராதாகிருஷ்ணனை அப்பா என்றும், கிருத்திகாவை அம்மா என்றும் அழைத்து வந்தனர். ”எங்க குடும்பம் ரொம்பப் பெருசு” எனக் காப்பகத்திற்கு வரும்போதெல்லாம் சொல்வாராம் ராதாகிருஷ்னன். `இந்தப் பிள்ளைகள் அழுதது போதும். இனி ஒரு பிள்ளை கண்ணுலகூட சொட்டுக் கண்ணீர் வரக்கூடாது' என குறை இல்லாமல் பார்த்துப் பார்த்து கவனித்திருக்கிறார்.
இந்தச் சூழலில், ராதாகிருஷ்ணன், பதவி உயர்வில் நாகையை விட்டுச் சென்றார். கண்ணீரும், கம்பலையுமாக தவித்து நின்றார்கள் பிள்ளைகள். காப்பகத்துக்கு வந்த ராதாகிருஷ்ணன், `நீங்க என்னோட உலகம், நான் எங்கிருந்தாலும் உங்களை வந்து பார்ப்பேன்' எனச் சொல்லிட்டுப் போயிருக்கிறார். நேரம் கிடைக்கும் போதெல்லாம் குடும்பத்துடன் வந்து பிள்ளைகளைப் பார்த்துச் சென்றிருக்கிறார். காப்பகத்தில் இருந்த பல பெண் பிள்ளைகள் வளர்ந்து இன்றைக்கு நல்ல நிலையில் இருக்கின்றனர்.
இந்தநிலையில், 18 வயதான சௌமியாவும் மீனாவுக்கும் காப்பகத்தில் தங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்தச் சூழலில் அப்போது சுகாதாரச் செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன் அனுமதியோடு நாகை கடற்கரைச் சாலையில் உள்ள மலர்விழி- மணிவண்ணன் தம்பதி சௌமியா, மீனா இருவரையும் தத்தெடுத்து வளர்த்து வந்தனர். ராதாகிருஷ்ணன் காட்டிய அன்பில் கொஞ்சமும் குறையாமல் இருவரையும் வளர்த்தனர் மலர்விழி - மணிவண்ணன் தம்பதி.
சௌமியா, மீனா குறித்து அக்கறையுடன் விசாரிப்பார் ராதாகிருஷ்ணன். மலர்விழி, மணிவண்ணன் பிள்ளைகளை வளர்த்த விதம் நல்ல குடும்பத்தில் பிள்ளைகளை ஒப்படைச்சிட்டோம் என்ற நம்பிக்கையை அவருக்குத் தந்துள்ளது. இந்த நிலையில் பிஏ படித்து முடித்து பட்டதாரியான சௌமியாவிற்கு சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இதில் ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார். இதேபோல் இரண்டாவது மகள் மீனாவிற்கு நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோயிலில் திருமணம் நடைபெற்றது.
இதில் ராதாகிருஷ்ணன் தன் மனைவி கிருத்திகா மற்றும் மகன் எனக் குடும்ப சகிதமாக கலந்துகொண்டு திருமணத்தை நடத்திவைத்தார். ”20 வருடத்துக்கு முன்பு பற்றிய கையை இப்போது வரை விடவில்லை” அவர் எனக்கு தகப்பன்சாமி என மணமகனுடன் மணமகள் மீனா, ராதாகிருஷ்ணன்- கிருத்திகா காலில் விழுந்து ஆசி வாங்கினார். நிஜ அப்பா - அம்மா இருந்திதிருந்தால்கூட நான் இவ்வளவு மகிழ்ச்சியாக இருந்திருப்பேனான்னு தெரியாது என கசிந்த கண்ணீரை ராதாகிருஷ்ணனுக்குக் காணிக்கையாக்கினார். இதே போல் மணிவண்ணன் - மலர்விழி தம்பதியிடமும் ஆசிர்வாதம் வாங்கினார். இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தால் மண்டபத்தில் இருந்த பலருக்கும் ஆனந்தக் கண்ணீர்.
``குழந்தையாகக் கிடைத்தாள், வளர்ந்து பெரிய மனுஷியான அவளுக்குக் கல்யாணம் நடந்திருக்கு. ஒரு தெய்வம் தந்த அந்தப் பூ முகத்தில் இப்ப மகிழ்ச்சி நிரம்பியிருக்கு. ஒரு தந்தையாக எனக்கு இந்த நாள் மிக முக்கியமான, மகிழ்ச்சியான நாள். இதைவிட வேறு எது எனக்கு சந்தோஷத்தைத் தரப்போகுது. எனக்கும், மனைவி கிருத்திகாவுக்கும் இப்பதான் மனசு நிறைஞ்சிருக்கு" என ராதாகிருஷ்ணன் நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார்.