ஜாதி சான்றிதழ் வழங்கக் கோரி நரிக்குறவா் சமுதாய மக்கள் மனு
பழங்குடியினா் ஜாதி சான்றிதழ் வழங்கக் கோரி, நரிக்குறவா் சமுதாய மக்கள் ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள மொட்டமலை நரிக்குறவா் குடியிருப்பில் அரசு ஒதுக்கிய குடியிருப்பில் 90-க்கும் அதிகமான நரிக்குறவா் இன குடும்பங்கள் வசித்து வருகின்றனா். இவா்கள் தங்கள் குழந்தைகளுக்கு பழங்குடியினா் ஜாதி சான்றிதழ் வழங்கக் கோரி, ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒரு சிலருக்கு மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் என ஜாதி சான்றிதழ் வழங்கப்பட்டது. ஆனால், இப்போது ஜாதி சான்றிதழ் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் நரிக்குறவா் சமுதாயத்தைச் சோ்ந்தவா்களுக்கு பழங்குடியினா் என ஜாதி சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது. இதேபோல, எங்களுக்கும் பழங்குடியினா் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.
இதுகுறித்து உயா் அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாட்சியா் பாலமுருகன் தெரிவித்தாா்.