போதையில்லாப் புத்தாண்டு - சிறுகதை | My Vikatan
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல. - ஆசிரியர்.
“அந்த அயல் நாட்டுக் கம்பெனியின் ஆட்குறைப்பு நடவடிக்கைகளின் போது வேலை இழந்த மணிவண்ணன், மனச்சோர்வுக்கு ஆளாகி, மதுப்பிரியர்களிடம் மயங்கி, மனம் போன போக்கில் போய்விட்ட ஏழு வருடங்களாக, ஒவ்வொரு புத்தாண்டு நாளிலும், “இன்னிலேர்ந்து குடியை விட்றுவேன்..” என்று, நள்ளிரவு 12 மணிக்குச் சத்தியம் செய்து விட்டு பகல் பனிரெண்டு மணிக்கெல்லாம் செய்த சத்தியத்தைப் பொய்யாக்கிவிட்டுக் குடிகார நண்பர்களைத் தேடிப் போய்விடும் அப்பாவை இந்தப் புத்தாண்டிலாவது மாற்றியேத் தீர வேண்டும் என்ற வைராக்கியம் எழுந்தது மகேஷிடம்.
தன் தந்தை ஒரு குடிகாரன் என்பதை, யாரால்தான் ஏற்றுக் கொள்ள முடியும்? அதுவும் கல்லூரியில் காலடி எடுத்து வைத்து விட்ட, வயது வந்த மகனால் எப்படி இந்த அவலநிலையை ஏற்றுக் கொண்டுச் சாதாரணமாக இருக்க முடியும்..?
விடியகாலை முதல் முன்னிரவு வரை பல வீடுகளில் பற்றுப் பாத்திரம் கழுவுதல், துணி துவைத்தல், வீடு கழுவி விடுதல், மாப் போடுதல், மாடித் தோட்டம் பராமரித்தல், இப்படியாக கிடைத்த வேலைகளையெல்லாம் செய்து, நியாயமாகச் சம்பாதித்து, குடிகாரக் கணவனையும் விட்டுக் கொடுக்காமல், இட்டு நிரப்பிக் குடும்பத்தை நிர்வகித்து வரும் அம்மாவை நினைத்தான் மகேஷ்.
தன்னைக் கல்லூரிப் படிப்பு வரைப் படிக்க வைத்து உயர்த்திய அம்மா; ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தனக்கு வாழ்வளித்த தன் கணவரின் வாழ்வு சீர் பெற வேண்டும் என்ற பிரார்த்தனை செய்து கொண்டு, ‘எல்லாம் கடந்து போகும்’ என்ற நம்பிக்கையை ஒரு போதும் கை விடாமல், பொறுமையின் சிகரமாய் தியாக வாழ்க்கை வாழ்வது பயித்தியக்காரத்தனமாகப் பட்டது மகேஷ்க்கு.
அம்மாவின் வருமானத்திலும் கைவைத்து, ‘டாஸ்மாக்’கில் குடிக்கும் தந்தையை நினைக்க நினைக்க வெறுப்பு வந்தது மகேஷ்க்கு.
பள்ளிப் படிப்பு முடியும் வரை எதிர்க்கச் சக்தியில்லாமல், அச்சத்தால், , வேறு வழியின்றி, பொறுமையாய் இருந்துவிட்டான் மகேஷ். கல்லூரியில் காலடி எடுத்து வைத்த பிறகு அனுவங்கள் கூட, அவனும் நிறைய ஜன்னல்கள் திறந்தன. அப்பா செய்வது அராஜகம் என்பதை உணர்ந்து சிறுமை கண்டு பொங்கினான் மகேஷ்.
வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப் பட்டப் அந்தப் பிரம்மாண்டமான பூங்காவில் நண்பர்களோடும், உறவினர்களோடும், குடும்பத்தினரோடும் சந்தோஷமாய்க் கழிக்கும் மக்களுக்கு நடுவே, தன்னைத் தனிமைப் படுத்திக் கொண்டு, மனம் புழுங்கி உட்கார்ந்து மருகுவதால் எந்த விளையும் ஏற்படப் போவதில்லை என்பதை அறியும் வயது வந்துவிட்டாலும் மகேஷால் சோர்வைப் போக்கிக் கொள்ள முடியவில்லை.
இதிகாசங்களிலும் புராணங்களிலும், ஒரு கதா பாத்திரம் சோர்ந்து போன நேரத்தில் அசரீரி ஒலித்து சோர்ந்தவரை எழுப்புவது போல, அந்தப் பூங்காவின் அருகே இருந்த பெரிய கடிகார மணி ஒலித்தது. மகேஷ், தனிமைத் தவத்தைக் கலைத்துக் கொண்டு ஒரு திடமான முடிவோடு வீடு நோக்கித் திரும்பினான்.
தெருக்களிலும், வீடுகளிலும், கோவில் வளாகங்களிலும், உணவகங்களிலும் எங்கெங்கும் புத்தாண்டை எதிர்நோக்கும் மக்கள் கூட்டத்தை ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டே வந்தான் மகேஷ்.
சிறுவர்களும், இளைஞர்களும், தங்கள் குடும்பத்தாரோடு குதூகலிப்பதும், அவரவர் வசதிக்கு ஏற்ற வகையில், இன்னும் சிலமணி நேரங்களில் பிறக்கப் போகும் புத்தாண்டைக் கொண்டாடுவதற்காகத் தங்களை ஆயத்தப் படுத்திக் கொண்டிருப்பதையெல்லாம் பார்த்த மகேஷ்க்கு, குடியை விடமுடியாத பலவீன மனம் படைத்த தன் தந்தையை நினைக்காமல் இருக்க முடியவில்லை.
‘என் சிறு வயதில் பாரதியார் பாட்டுக்களை, உணர்வோடு பாடி, என்னை பாரதியின் தாசனாக வளர்த்த அப்பா இன்று இப்படி ஆகிவிட்டாரே. நடுவில் வந்த பழக்கம்தான் இது. எப்படி வந்ததோ அப்படியே போய்விடாதா..!’ என்று ஏங்கினான். எண்ணி எண்ணி மருகினான் மகேஷ்.
“மகேஷ்...”
வாசல் கேட்’டில் மகனின் முகம் கண்டதும் ஓட்டமாய் ஒடி, மகேஷின் தோள் மேல் ஆதங்கமாகக் கை போட்டுப், பாசத்துடனும், படபடப்புடனும் உள்ளே அழைத்து வந்தாள் தாய் மானஸி.
மகன் முகத்தில் அப்பியிருந்த சோகம், தாய்க்குக் கவலையை அளித்தது.
புத்தாண்டின் வருகையை அனுசரித்து, ஆங்காங்கே விடப்படும் வான வேடிக்கைகளின் பின்னணியில் “மகேஷ்” என்று அழைத்தாள் மானஸி.
“ம்.. சொல்லுங்கம்மா..?”
“புது வருஷம் பிறக்க இன்னும் ஒரு மணி நேரம் கூட இல்லை..? எங்கேடா இந்த நேரத்துல ஊரைச் சுத்திட்டு வரே..?”
“ஊரையெல்லாம் சுத்தலைம்மா..?”
“வேற எங்கேதான் போயிட்டு வரே மகேஷ்..? கைல செல் போன் கூட கொண்டு போகாம அப்படி எங்கேதான் போவே..?”
“அது வந்தும்மா...!”
“.......................”
“கணேஷ் ஃப்ளாட்டுல, மாமா அத்தை யோட டைம் ஸ்பெண்ட் பண்ணினேன். ஜாலியா இருந்துச்சு. அதான் இப்போ வந்துட்டேனே..?”- என்றான் மகேஷ் இயல்பாக. அப்போது அவன் கண்கள் வீட்டின் முகப்பில் இருந்த புல்வெளியில் நாற்காலியில் அமர்ந்து கொண்டு, அப்பாவித்தனமாக முகத்தை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்த அப்பாவின் மேல் பதிந்திருந்தது.
“மாமா அத்தையோட இருந்தேன்” என்று மகேஷ் சொன்ன பதில் கேட்டதும், ‘சொரேர்...’ – என்றது மானஸிக்கு.
‘அய்யோ, மகேஷ் இப்படி அப்பட்டமாய், கூசாமல், அதிராமல் பொய் சொல்றானே.. மகேஷ் பொய் சொல்வானா? தன் மகன் ஒரு பொய்யனா? – பெற்ற மனம் பரிதவித்தது.
“மாமாவும், அத்தையும் எப்படி இருக்காங்க..?;
என்ன சொன்னாங்க? ;
அவங்களையும் புத்தாண்டுக்கு வீட்டுக்கு வெல்கம் பண்ணினியா..?”- என்றெல்லாம் கேள்விகள் எழுப்பி, ஒரு பொய்க்கு அண்டைக் கொடுக்க அடுக்கடுக்காய் மகேஷின் வாயில் இருந்து மேலே மேலேப் பொய்களை வாங்க விருப்பமில்லை மானஸிக்கு..;
‘ஒரு பொய் சொன்னவன் வாயிலிருந்து ஓராயிரம் பொய்களை உதிர்க்க விடக்கூடாது’ ;
பெற்ற மகனிடமே நடிப்பதா?, கூடவேக் கூடாது;
நேரடியாக விஷயத்தைப் போட்டு உடைப்பதே நல்லது...!’ என்ற முடிவுக்கு வந்தாள் மானஸி.
“மகேஷ் நீ அத்தை வீட்டுக்குப் போயிருக்க சான்ஸே இல்லை..” – அம்மா தீர்மானமாகச் சொன்னாள்.
‘குடிகார அப்பாவை நினைச்சி, மனசு சரியில்லாம, தெருவோரப் பூங்காவுல பைத்தியம் மாதிரி உட்கார்ந்திருந்துட்டு வந்தேன்..?’ – என்று ‘உண்மையைச் சொல்லி விடலாமா?’– என்று கூட மகேஷ் மனசு ஒரு கனம் யோசித்தது.
“ம்ஹூம்.. தொடர்ந்து பொய் சொல்வதே இந்த இடத்தில் சரி.. முள்ளை முள்ளால்தானே எடுக்கவேண்டும்... பொய்மையும் வாய்மையிடத்து...” – என்று தடுத்தது மகேஷின் புத்தி.
“அத்தை வீட்டுக்குத்தான் போனேன்மா.. நீ வேணா, போன் போட்டுக் கேட்டுப்பாரு?”– என்றான் மிகவும் தைரியமாக.
மகன் மகேஷின் தங்கமான குணம் தாய் மானஸிக்கு மிக நன்றாய்த் தெரியும். தாய் அறியாத சூல் உண்டா?;
இருந்தாலும் சந்தர்ப்ப வசத்தால், சூழ்நிலைக் கைதியாகி பொய் சொல்லத் துணிந்தானோ?’- என்றெல்லாம் தனக்குள் குழப்பிக் கொண்டாள்.
“என்னம்மா யோசிக்கறே? ஃபோன் பண்ணி அத்தையக் கேளு..?” – தன் பொய்யை மேலும் உறுதிப்படுத்தினான் மகேஷ்.
“மகேஷ், உங்க மாமாவும் அத்தையும் இப்போ, ஊர்லயே இல்லை. இன்னிக்கு மதியமேப் புறப்பட்டு, திருச்சி போயிருக்காங்க. என்கிட்டேச் சொல்லிட்டுத்தான் கிளம்பினாங்க. அவங்க வீட்டைப் பூட்டிச் சாவியைக் கூட நம்ம வீட்டு ஹால்லதான் மாட்டியிருக்காங்க.” – என்றாள் மானஸி.
அம்மாவின் முன் தலை குனிந்து நின்றான் மகேஷ்.
“பாரதியார் ‘பொய் சொல்லக்கூடாது பாப்பா’னு, சொல்லியிருக்கார் தானே?”– மணிவண்ணன் கர்ஜித்தார்.
“ஆமாம் டாடி?”– என்றான் மகேஷ். அவன் குரலில் குற்ற உணர்வு இல்லை. அவன் பேச்சில் மிக இயல்பான தன்மையே இருந்ததை அம்மா மானஸி துல்லியமாகக் கவனித்தாள்.
“நர்சரி ஸ்கூல்ல படிக்கும் போது, மாறு வேடப் போட்டீல கூட நீ பாரதியார் வேஷம் கட்டிக்கிட்டு, “பொய் சொல்லக்கூடாது பாப்பா” ங்கற பாரதியார் கவிதையைப் பாடித்தானே முதல் பரிசு வாங்கினே..?”
“யெஸ் டாடி..! நீங்க சொல்றது சரிதான்.. இன்னிக்குத்தான் முதல் முதல்ல ஒரு பொய்யைச் சொல்லிட்டேன்.”– என்றான் மகேஷ் இயல்பாக.
“முதல் பொய்யும் கடைசீ பொய்யும் இதுவா இருக்கட்டும். புத்தாண்டு பிறக்க இன்னும் பத்து நிமிஷம்தான் இருக்கு. “இனிமே பொய் சொல்லவே மாட்டேன்’னும்; பாரதியார் சொன்னபடி நடப்பேன்னு சத்தியம் பண்ணு..”– என்றாள் அம்மா.
அருகே நாற்காலியில் அமர்ந்திருந்த மணிவண்ணனும் “பாரதியார் சொன்னபடி பொய் சொல்லாதவனா இந்தச் சமூகத்துல நீ வலம் வரணும் மகேஷ்..”– என்று வியாக்கியானம் செய்தார்.
“அப்பா..”
“ம்...!”
“நீங்க சொன்னபடி நடந்துக்கறேன்ப்பா.. ஆனா ஒண்ணே ஒண்ணு மட்டும் கேக்கறேன் பதில் சொல்லுங்கப்பா..”
“ம் கேளு..”
‘பொய் சொல்லக் கூடாது பாப்பா’னு” மட்டும்தான் பாடியிருக்காராப்பா பாரதியார்;
‘இனி ஒரு விதி செய்வோம் அதை எந்த நாளும் காப்போம்’ னும்’ சொல்லியிருக்கார்ப்பா..”
“ஆமாம்... யாரு இல்லேன்னது.?”
“நீங்கதான் டாடி.!”
“என்னடா உளர்றே? நான் எப்போச் சொன்னேன்..?”
“நீங்க வாயால சொல்லலைப்பா, வாழ்ந்தேக் காட்டுறீங்க..?”
“....................” மணிவண்ணனின், அமைதியான முகம், “என்னடா சொல்றே மகேஷ், எனக்கு ஒண்ணுமேப் புரியலை..?” – என்ற வியப்புடன் கூடிய வினாவையேப் பிரதிபலித்தது.
“வருஷா வருஷம் புத்தாண்டு பிறக்கற நேரத்துல.. அப்பாவியா முகத்தை வெச்சிக்கிட்டு நீங்க ஒரு ப்ராமிஸ் பண்றதும், அடுத்த பன்னிரெண்டு மணி நேரத்துல அந்த சத்தியத்தை மீறறதும் சரியா டாடி..?”
மகன் கேட்ட கேள்வியில், அப்பா மட்டுமல்ல, அம்மாவும் ஆடிப்போனாள்.
குழந்தைகளின் அசாத்திய கவனிக்கும் திறனும், தவறுகளைச் சுட்டிக்காட்டும் துணிவும் கண்டு பிரமித்தனர் மணிவண்ணனும், மானஸியும்.
“இந்த நிமிஷத்துலேர்ந்து, நான் தண்ணியடிக்கறதை முழுமையா விட்டுடறேன்..” என்று வழக்கம்போல் பலமாகச் சொல்லி, மனைவியையும் மகனையும் ஏமாற்றவில்லை மணிவண்ணன்.
நாற்காலியை விட்டு எழுந்தார், மகன் அருகில் வந்தார்.
“மகேஷ், இந்தப் புத்தாண்டுல அப்பா எடுக்கற ப்ராமிஸை எந்தநாளும் காப்பேன்...!” – என்று தோளுக்கு மேல் வளர்ந்துவிட்ட மகனின் தோள்களில் தன் கைகளை மாலையாய் வைத்து ஒரு தோழனாய்ப் பாவித்து உண்மையாய் உறுதியளித்தார் மணிவண்ணன்.
“டாண்...! டாண்...!!” – என்று சுவர் கடிகாரத்தில் அடிக்கத் தொடங்கி, புத்தாண்டுக்குக் கட்டியம் கூறியது.
அப்பாவிற்கு வைராக்யம் ஏற்படுத்த வேண்டும் என்று தற்காலிகமாகப் பொய் சொல்லி, அவர் வாயைக் கிளறி, அவரைச் சிந்திக்க வைத்து நல்வழியில் திரும்ப ஒரு கருவியாக இருந்த மகனைப் பெருமிதத்தோடு அணைத்து முத்தமிட்டாள் மானஸி.
வான வேடிக்கைகளின் பின்னயியில், ‘விஷ்யூ ஹாப்பி நியூ இயர்’என்ற மகிழ்ச்சிக் கூவல் தெருவெங்கும் ஓங்கி ஒலிக்க, ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு மணிவண்ணனின் குரலில் உண்மையான மகிழ்ச்சிக் கூவலைக் கண்டார்கள் மானஸியிம் மகேஷும்.
தன் மகன் மகேஷுக்குள் தன்முனைப்பேதும் தங்கியிருந்தால் அது தகர்ந்துவிடட்டுமே.. என்ற நோக்கத்தில்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...