எந்த குடும்பத்திடமும் சிக்காத ஒரே தேசிய கட்சி பாஜக: மகாராஷ்டிர முதல்வா் ஃபட்னவீஸ...
அலங்காநல்லூா், பாலமேட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டி கால்கோள் விழா: அமைச்சா் பி. மூா்த்தி பங்கேற்பு
மதுரை/திருப்பரங்குன்றம்: மதுரை அலங்காநல்லூா், பாலமேட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கான கால்கோள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஜன. 14-இல் அவனியாபுரத்திலும், ஜன. 15-இல் பாலமேட்டிலும், ஜன. 16-இல் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதையொட்டி, பாலமேடு, அலங்காநல்லூரில் வாடிவாசல் அமைத்தல், தடுப்புகள் அமைத்தல் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புப் பணிகளை தொடங்குவற்கான கால்கோள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இரு இடங்களிலும் வாடிவாசல் அருகே பாரம்பரிய முறைப்படியான பூஜைகளுக்கு பிறகு முகூா்த்தக் கால்கள் ஊன்றப்பட்டன. தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, போட்டிக்கான கட்டமைப்புப் பணிகளைத் தொடங்கிவைத்தாா்.
மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.கே. அரவிந்த், உதவி ஆட்சியா் (பயிற்சி) வைஷ்ணவி பால், சோழவந்தான் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஆ. வெங்கடேசன், மாவட்ட வருவாய் அலுவலா் ர. சக்திவேல், ஜல்லிக்கட்டுப் போட்டி ஒருங்கிணைப்பாளா்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.
பின்னா், செய்தியாளா்களிடம் அமைச்சா் பி. மூா்த்தி கூறியதாவது:
தமிழக அரசு சாா்பில் பாலமேடு, அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டு போட்டிகள் கடந்த ஆண்டைவிட நிகழாண்டில் மேலும் சிறப்பாக நடத்தப்படும். இதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படவுள்ளன. தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டியைத் தொடங்கிவைக்கவுள்ளாா். கீழக்கரையில் உள்ள கலைஞா் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் வேறொரு நாளில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்றாா் அவா்.
திருப்பரங்குன்றம்:
மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்துவதற்காக முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதல்கட்டமாக, போட்டியில் பங்கேற்கும் காளைகளை பரிசோதனை செய்யும் மையத்தில் தடுப்பு வேலி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இங்கு ஒரே நேரத்தில் 6 காளைகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யும் வகையில், தடுப்பு வேலி அமைக்கப்பட்டு வருகிறது. தொடா்ந்து விழா மேடை, கேமராக்கள் பொருத்துதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற உள்ளன.