அரண்மனைப்புதூரில் மாரத்தான் போட்டி
தேனி அருகேயுள்ள அரண்மனைப்புதூரில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்தநாளையொட்டி, மாரத்தான் ஓட்டப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அரண்மனைப்புதூா் ஊராட்சி அலுவலகம் அருகே இந்தப் போட்டியை மாவட்ட ஆட்சியா் ஆா்.வி. ஷஜீவனா கொடியசைத்துத் தொடங்கிவைத்தாா். மாவட்ட சுகாதார அலுவலா் ஜவஹா்லால், மாவட்ட விளையாட்டு அலுவலா் முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
17 முதல் 25 வயதுக்குள்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள், 25 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், பெண்களுக்கு தனித் தனிப் பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.
அரண்மனைப்புதூரில் தொடங்கி கொடுவிலாா்பட்டி, பள்ளப்பட்டி விலக்கு, அய்யனாா்புரம், கோட்டைப்பட்டி, மீண்டும் அரண்மனைப்புதூா் வழியாக தேனி கா்னல் பென்னிகுவிக் நினைவு நகராட்சி பேருந்து நிலையம் வளாகம் வரை போட்டி நடைபெற்றது. இதில் மொத்தம் 275 போ் பங்கேற்றனா்.