முட்டாள்தனமானப் பேச்சு: பாஜக வேட்பாளருக்கு பிரியங்கா கண்டனம்!
டிஜிட்டல் கைது: எல்லைப் பாதுகாப்புப் படை ஆய்வாளரிடம் ரூ. 71 லட்சம் மோசடி!
டிஜிட்டல் கைது மோசடியில் எல்லைப் பாதுகாப்புப் படை ஆய்வாளரிடம் ரூ. 71 லட்சத்தை ஒரு கும்பல் ஏமாற்றியுள்ளது.
மத்தியப் பிரதேசம் குவாலியர் நகரின் தேகன்பூர் பகுதியில் எல்லைப் பாதுகாப்புப் படையின் பயிற்சி மையம் உள்ளது. இங்கு ஆய்வாளராகப் பணியாற்றும் அவ்சார் அஹமதுக்கு ஒரு மாதத்திற்கு முன் ஒரு மொபைல் அழைப்பு வந்துள்ளது.
அதில், அஹமது பணம் கையாடலில் ஈடுபட்டதால் அவரைக் கைது செய்ய இருப்பதாகக் கூறிய நபர்கள், தங்களை போலீஸ் அதிகாரிகள் என்று கூறி வாட்சப் விடியோ காலில் அழைத்து மிரட்டியுள்ளனர். அவருடைய தொலைபேசியின் அனைத்து நடவடிக்கைகளையும் தாங்கள் கண்காணித்து வருவதாகக் கூறிய கும்பல் அவர் இது குறித்து வெளியே சொன்னால் குடும்பத்தினரையும் கைது செய்வோம் என மிரட்டியுள்ளனர்.
இதனால், பயந்துபோன அஹமது அவர்களின் கோரிக்கைகளுக்கு இணங்கினார். அவர்கள் பணம் கேட்டு மிரட்டியதால் தில்லியில் இருந்த தனது வீட்டை விற்று, சேமிப்பில் இருந்த பணத்தையும் மோசடி கும்பலுக்குக் கொடுத்துள்ளார். இதன்படி, 34 பரிவர்த்தனைகள் மூலமாக ரூ. 71 லட்சம் வரை மோசடி கும்பலின் வங்கிக் கணக்குக்கு அனுப்பியுள்ளார்.
அதன் பின்னரும் அவரைக் கண்காணிப்பில் வைத்துள்ளதாகக் கூறிய மோசடிக் கும்பல் அவரது பயத்தை பயன்படுத்திக் கொண்டனர். இவ்வாறு தொடர்ந்து ஒரு மாதகாலம் அவரை அச்சுறுத்தி வந்துள்ளனர்.
இதையும் படிக்க | சல்மான் கான் வீட்டில் பொருத்தப்படும் குண்டு துளைக்காத கண்ணாடிகள்!
தனது தந்தையின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டதால் அஹமதின் மகன் குவாலியருக்க்குச் சென்று தந்தையை சந்தித்தார். அப்போது, இந்த விவகாரம் குறித்து தெரிந்ததும் அதிர்ச்சியடைந்த அவரது மகன் உடனடியாக இதனை காவல்துறையில் புகாரளிக்குமாறு கூறினார்.
ஒரு மாதம் டிஜிட்டல் கைது மோசடியில் சிக்கியிருந்த அஹமது குவாலியர் சைபர் கிரைம் போலீஸிடம் மோசடிக் கும்பல் குறித்து புகாரளித்தார். சைபர் கிரைம் அதிகாரிகள் இந்த வழக்கில் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.