யுஜிசி புதிய விதிகளுக்கு எதிராக சட்டப்பேரவையில் தனித் தீர்மானம்!
டெலிவரி பாய் டு நீதிபதி... படிப்பால் உயர்ந்த கேரள இளைஞரின் வெற்றிக்கதை!
"நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ" என்ற பாரதியாரின் வரிதான் யாசின் ஷா முகமது பல தடைகளையும் பின்னடைவுகளையும் கடந்து வெற்றி பெறுவதற்கான நெருப்பை அவருள் நிலைத்திருக்கச் செய்துள்ளது. சாதாரண டெலிவரி பாயாக பணியாற்றிய யாசின் மாவட்ட சிவில் நீதிபதியாக உயர்ந்தது எப்படி?
யாசின் கேரள நீதித்துறை சேவைகளுக்கான தேர்வில் இரண்டாவது இடத்தைப் பிடித்து சிவில் நீதிபதியாகத் தேர்வாகியிருக்கிறார். அவருடைய வாழ்க்கையின் 'This is Cinema' மீம் போடும் இந்த தருணத்துக்கு அவர் வந்தடைந்தது எப்படி?
இளமையில் வறுமை...
சிறுவயதிலிருந்தே யாசின் பல சவால்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. அவர் 3 வயதாக இருந்தபோதே, தந்தை குடும்பத்தைக் கைவிட்டுச் சென்றுள்ளார். அப்போது 19 வயதாயிருந்த யாசினின் தாயார் அவரை மட்டுமல்ல, அவரது தம்பி மற்றும் பாட்டியையும் பார்த்துக்கொள்ள வேண்டியிருந்தது. அவர்கள் நிர்க்கதியாக ஒரு பாழடைந்த வீட்டில் தங்களது வாழ்க்கையைத் தொடங்கியுள்ளனர்.
மாநில அரசின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு கிடைத்தது அவர்களை நெருக்கிக்கொண்டிருந்த சிக்கல்களிலிருந்து ஆசுவாசம் அளித்துள்ளது. இரண்டு மாடுகளை வாங்கிய யாசினின் தாயார் ஒவ்வொரு நாளும் பல கிலோ மீட்டர்கள் நடந்து சென்று பால் விற்பனை செய்து தனது குழந்தைகளைக் காப்பாற்றியுள்ளார்.
அயராத உழைப்பு!
சிறு வயதிலிருந்தே யாசினும் பல வேலைகளைச் செய்துள்ளார். எந்த வேலையானாலும் செய்துவந்த யாசின் எப்போதும் உழைப்பை நம்பியிருக்கிறார். ஒவ்வொரு நாளும் அதிகாலை 4 மணிக்கு எழுந்து 10 கிலோ மீட்டர் சுற்றுவட்டாரத்தில் உள்ள வீடுகளுக்குச் செய்தித்தாள் விநியோகம் செய்துள்ளார். பின்னர் 7 மணியிலிருந்து அருகில் உள்ள வீடுகளுக்குப் பால் விநியோகம் செய்துவிட்டுப் பரபரப்பாகப் பள்ளிக்குக் கிளம்பிச் சென்றுள்ளார்.
இதுமட்டுமல்லாமல் கேட்டரிங் சேவைகள், கல் உடைக்கும் வேலை, பெயிண்ட் அடிப்பது, உணவு டெலிவரி செய்வது எனப் பல வேலைகளில் ஈடுபட்டுள்ளார் யாசின்.
பழைய புத்தகங்களை வைத்துப் படித்து, மற்றவர் கழித்த ஆடைகளை உடுத்திக்கொண்டு, வீட்டில் என்ன இருக்கிறதோ அதை உண்டு எப்போதும் ஆடம்பர வாழ்க்கையை விட நேர்மையான உழைப்பையும் நிலையான அறிவை வளர்க்கும் கல்வியையுமே தேர்ந்தெடுத்துள்ளார்.
கைகொடுத்த கல்வி!
12 ஆம் வகுப்பு வரை படித்த யாசின், எலெக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ படிக்க சேர்ந்துள்ளார். ஒரு வருட காலம் குஜராத்தில் பணியாற்றியவர், பொது நிர்வாகவியலில் பட்டம் பெறுவதற்காகத் திரும்பியுள்ளார். பொது நிர்வாகவியல் இறுதியாண்டில் மாநில சட்ட நுழைவுத் தேர்வு குறித்து யாசினுக்குத் தெரியவந்துள்ளது. அதனால் அந்த தேர்வுக்குத் தயார்ப்படுத்திக்கொள்ளத் தொடங்கிவிட்டார்.
எர்ணாகுளத்தில் உள்ள புகழ்பெற்ற அரசு சட்டக் கல்லூரியில் அவருக்கு இடம் கிடைத்துள்ளது. எர்ணாகுளம் போன்ற நகரத்தில் படிக்கும்போது டெலிவரி பாய் வேலையும் செய்யலாம் என்பது யாசினின் எண்ணம். கல்லூரி முடிந்த பிறகு இரவு 2 மணிவரை டெலிவரி வேலையில் ஈடுபட்டுள்ளார்.
யாசினுக்குச் சிறுவயதிலேயே கல்வியின் அருமை தெரிந்திருக்கவில்லை என வருத்தம் கொள்கிறார். அவரது வெற்றிப்பாதை குறித்து அவரே எழுதிய பதிவில், "நான் சுமாராக படிக்கக் கூடிய மாணவனாக இருந்தேன். தொடர்ந்து ஆங்கிலத்திலும் கணிதத்திலும் தோல்வி அடைந்தேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
Delivery Boy டு நீதிபதி!
2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் யாசின் வழக்கறிஞராகப் பதிவு செய்துள்ளார். பட்டாம்பி-முன்சிஃப் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஷாகுல் ஹமீது பி.டி என்பவருக்குக் கீழ் பணியாற்றியுள்ளார். மாஜிஸ்திரேட்டுக்கான தேர்வில் கடந்த ஆண்டு 58வது இடத்தைப் பிடித்துள்ளார். எனினும் அவருக்குப் பணி நியமனம் கிடைக்கவில்லை. மீண்டும் முயற்சி செய்து இந்த ஆண்டு தனது கனவை வென்றுள்ளார்.
"நான் மலையாள வழி பள்ளியில் படித்தேன். இதனால் எனக்கு ஆங்கிலம் மிகவும் சவாலாக இருந்தது. இந்த தேர்வில் முழுவதும் ஆங்கிலத்தில் எழுதவேண்டிய பகுதிகள் எனக்குக் கடினமாக இருந்தது" என அவரது தேர்வு அனுபவம் குறித்துக் கூறியுள்ளார்.
6 வயதில் மிகவும் கடினமான வாழ்க்கையைச் சுமந்த சிறுவன் இன்று, 29 வயதில் அனைவரும் மதிக்கும் மாஜிஸ்திரேட் பதவியை அடைந்துள்ளார் என்பது பிரமிக்க வைக்கும் வெற்றி.
அவரது வாழ்க்கைப் பயணம் குறித்துப் பேசுகையில், "வாழ்க்கை எனக்குக் கொடுக்கத் தயங்கும் அனைத்தையும் வாழ்க்கையிடம் இருந்து பெறுவேன்" என்ற மலையாளக் கவிஞர் சங்கம்புழாவின் வரிகளை நினைவுபடுத்திக்கொள்கிறார் யாசின்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY