செய்திகள் :

``காய்ச்சல்'னு போனோம்; இப்ப உயிருக்குப் போராடுறா!" - 9 வயது மகளின் சிகிச்சைக்கு உதவி கேட்கும் அப்பா!

post image

"யாழினி எப்பவும் சந்தோஷமா, சிரிச்சுட்டே இருக்கிற குழந்தை. நமக்கு ஏதாச்சும் கஷ்டம், சோகம் இருந்தாகூட... ஓடி வந்து கதை கதையா சொல்ற அவளோட மலர்ந்த முகத்தை பார்த்ததுமே நம்ம மனசுக்கும் அவளோட மகிழ்ச்சி தொத்திக்கும். ‘என் ராசாத்தி...’னு அவளைக் கொஞ்சுறப்போ, நம்ம பிரச்னையெல்லாம் தற்காலிகமா காணாமப் போயிடும். ஆனா, இப்போ ஹாஸ்பிட்டல் பெட்ல உயிருக்குப் போராட்டிட்டு இருக்குற எம்பொண்ணை பார்க்குறப்போ, எங்க உயிர் கரைஞ்சுட்டே இருக்கு. எங்க குடும்பமே நிலைகுலைஞ்சு போயிருக்கோம். யாழினி முகத்தை பார்த்துப் பார்த்து எங்க கஷ்டத்தையெல்லாம் மறந்த எங்களுக்கு, இப்போ அவ முகத்தை நேருக்கு நேரா பார்க்கவே மனசு அஞ்சுது. அந்தளவுக்கு சிரமப்படுது குழந்தை’’ - கலங்கிய கண்களுடன் பேசுகிறார் கணேச பாண்டியன்.

சென்னை, தரமணியைச் சேர்ந்த கணேச பாண்டியன் மற்றும் முருகலட்சுமியின் மூத்த மகள் ஸ்ரீ செண்பக யாழினிக்கு வயது 9; நான்காம் வகுப்புப் படிக்கிறாள். கணேச பாண்டியன், பாரிமுனையில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வருகிறார். அவரின் மனைவி குடும்பத்தலைவி. இரண்டாவது மகன் ஐரிக், இரண்டாம் வகுப்புப் படிக்கிறான்.

சில நாள்களுக்கு முன், குழந்தைக்கு காய்ச்சல் என்று மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற பெற்றோருக்கு, அவளுக்கு எடுக்கப்பட்ட அடுத்தடுத்த பரிசோதனை முடிவுகள் அதிர்சியைக் கொடுத்தன. தற்போது சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் நுரையீரல் தொற்று சிகிச்சைக்காக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறாள் யாழினி. அவர் உயிர் காப்பதற்கான கட்டணம், அவள் பெற்றோரால் நினைத்தும் பார்க்கமுடியாத லட்சங்களில் உள்ளது.

கணேச பாண்டியன்

"மூணு வாரத்துக்கு முன்னாடி யாழினிக்கு லேசான காய்ச்சலா இருந்தது. பக்கத்துல இருந்த குழந்தைகள் மருத்துவமனைக்குக் கூட்டிட்டுப் போனோம். வைரஸ் காய்ச்சல்னு மருந்து, மாத்திரை கொடுத்தாங்க. நாலஞ்சு நாள் ஆனதுக்குப் பிறகும் அடிக்கடி சோர்வா இருந்ததோட, தூங்கிட்டே இருந்தா. மாத்திரை சாப்பிட்டதாலதான் சோர்வா இருக்கானு நினைச்சுட்டோம். ஸ்கூலுக்கு அனுப்பாம வீட்டுலயே ஓய்வெடுக்க வெச்சோம்.

அடுத்த நாள் காலையில வழக்கம்போல சாப்பிட்டு, ஜூஸ் குடிச்சா குழந்தை. கொஞ்ச நேரத்துல வலிப்பு மாதிரி வந்துடுச்சு. பயந்துபோய் பக்கத்துல இருக்க மருத்துவமனைக்கு தூக்கிட்டுப் போனோம். அவங்க, வேற பெரிய மருத்துவமனைக்குக் கூட்டிட்டுப் போங்கன்னு சொல்லிட்டாங்க.

ரொம்ப பயந்துபோய், இன்னொரு மருத்துவமனைக்குக் கூட்டிட்டு போனோம். அங்க தீவிர சிகிச்சைப் பிரிவு (ICU) வசதி இல்லைனு சொல்லிட, இப்போ கிண்டியில இருக்கிற தனியார் குழந்தைகள் மருத்துவமனையில அட்மிட் பண்ணியிருக்கோம். அங்க மருத்துவர்கள் பார்த்துட்டு, என் பொண்ணுக்கு நுரையீரலை பாதிக்கிற தொற்று, அதோடு சேர்த்து இன்னும் சில தொற்றுகள் பாதிச்சிருக்குனு சொன்னாங்க. சில நாள்கள் வென்டிலேட்டர்ல வெச்சுதான் சிகிச்சையளிச்சாங்க. அதுக்குப் பிறகு எக்மோ கருவி பொருத்தினாதான் உயிர் பிழைக்க முடியும்னு சொல்லி அதைப் பொருத்தியிருக்காங்க. இன்னும் செய்ய வேண்டிய சிகிச்சை இருக்கு. தெரியாத நோய், எங்களால முடியாத சிகிச்சைனு கொஞ்ச நாள்ல எங்க மொத்த வாழ்க்கையும் மாறிப்போய்க்கிடக்கு’’ - பரிதவிப்பும் ஆற்றாமையுமாகச் சொன்னார் அந்த அப்பா.

யாழினி

மருத்துவர்கள் சொல்வது என்ன?

குழந்தையின் உடல்நிலை பற்றி மருத்துவமனையின் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவின் மூத்த மருத்துவர் நடராஜ் பழனியப்பன் அளித்துள்ள அறிக்கை:

’’குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது நுரையீரலை தீவிரமாகப் பாதித்து உயிரிழப்பைக்கூட ஏற்படுத்தும் பாக்டீரியா தொற்று (Severe Pneumococcal pneumonia), இன்ஃப்ளூயன்ஸா பி வைரஸ், நுரையீரல் தீவிரமாக காயப்பட்டிருப்பதால் அதில் திரவம் சேர்ந்து சுவாசிப்பதற்கு பிரச்னையை ஏற்படுத்தும் (Severe ARDS) நிலை, ரத்தத்தில் நச்சேற்றம் (Sepsis) உள்ளிட்டவை கண்டறியப்பட்டன. குழந்தைக்கு சுவாசிப்பதில் பிரச்னை இருந்ததால் வென்டிலேட்டர் பொருத்தி சிகிச்சையளிக்கப்பட்டது. நுரையீரல் செயல்பாட்டில் பிரச்னை இருந்ததால் எக்மோ கருவி பொருத்தப்பட்டது.

எக்மோ கருவியில் இரண்டாவது நாள் சிகிச்சை பெற்றபோது, நுரையீரல் மற்றும் இதய சுவர் இரண்டுக்கும் நடுவிலுள்ள பகுதியில் காற்று சேரும் (Pneumothorax) நிலை ஏற்பட்டது கண்டறியப்பட்டது. மேலும் குழந்தையின் கல்லீரலும் செயலிழந்த நிலையில் இருந்தது. இதுதவிர, தசைகள், இதயம் சேதமடைந்ததன் விளைவாக குறிப்பிட்ட நொதி (Creatinine kinase) அளவுக்கு அதிகமாக அதிகரித்துள்ளது. குழந்தையின் இடுப்பிலிருந்து கால் விரல்கள் வரை நிறம் மாறி காணப்படுகிறது...’’

- இப்படி இன்னும் நீள்கிறது இந்த மருத்துவ அறிக்கை. சிகிச்சையளிக்கும் ஹெமட்டாலஜிஸ்ட், ரத்தநாள அறுவை சிகிச்சை மருத்துவர்கள் மேலும் பல்வேறு சிகிச்சைகள், அறுவை சிகிச்சைக்குப் பரிந்துரைத்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எக்மோ... இந்தக் கருவியானது தீவிர இதயம் மற்றும் நுரையீரல் செயலிழப்பு நோயாளிகளுக்குப் பொருத்தப்படும். நுழையீரல் செயலிழப்பு காரணமாகக் குழந்தைக்குத் தற்போது எக்மோ கருவி பொருத்தப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

"தீவிர சிகிச்சையில எங்க பொண்ணு இருந்தப்போ, ஒவ்வொரு நொடியும் எங்களுக்கு நரகமாதான் நகர்ந்தது. அவ கண்ணைத் திறந்து பார்த்த பின்னாடிதான், எங்க உயிர் எங்ககிட்ட வந்தது. சிகிச்சை தொடர்ந்து நடந்துட்டு இருக்கிறதால, குழந்தையால பேசவெல்லாம் முடியல. இதுவரைக்குமான சிகிச்சைக்கு எங்க கையில இருந்து காசு, சேமிப்பு, முடிஞ்சவரை கடன்னு எல்லாம் பண்ணிட்டோம். அடுத்து என்ன பண்ணுறதுனு தெரியலை...’’ - சொல்லும்போதே மிரள்கின்றன கணேச பாண்டியனின் கண்கள்.

"இன்ஃப்ளூயன்சா பி வைரஸோட இன்னும் சில தொற்றுகளும் சேர்ந்து எங்க குழந்தையை பாதிச்சிருக்காம். 10 லட்சத்துல ஒருத்தருக்குத்தான் இந்த பாதிப்பு வரும்னு டாக்டர் சொல்றாங்க. இதுவரை கிட்டத்தட்ட 25 லட்சம் ரூபாய்க்கு மேல செலவு பண்ணிட்டோம். ஹெல்த் இன்ஷூரன்ஸ் மூலமா 10 லட்சம் கிடைச்சது. எங்க சொந்த ஊரான கோவில்பட்டியில இருந்த நிலத்தை வித்ததுல 8 லட்ச ரூபாய் கிடைச்சது. அதுக்கப்புறம் கையில இருந்த நகையை வித்ததுல 3 லட்சம் ரூபாய், குழந்தைகளுக்கு உதவுற அமைப்பு மூலமா 3 லட்ச ரூபாய் கிடைச்சது. உறவினர்களும் கொஞ்சம் உதவி பண்ணினாங்க.

பல உறுப்புகள் பாதிக்கப்பட்டிருக்கிற இந்தப் பிரச்னைக்கு சிகிச்சை அளிக்கிறதுல நிறைய சிக்கல் இருக்குனு டாக்டர்கள் சொல்றாங்க. அடுத்து என்ன பிரச்னை வரும், என்ன பாதிப்பு ஏற்படும்ங்கிறதை அவங்களாலகூட கணிக்க முடியல. செலவு அதிகரிச்சிட்டே இருக்கு. மொத்தமா எவ்வளவு செலவாகும்னு மருத்துவர்களால உறுதியா சொல்ல முடியல. இப்போதைக்கு, அடுத்தகட்ட சிகிச்சைக்கு 15 லட்ச ரூபாய் வரை தேவைப்படும்னு சொல்லியிருக்காங்க.

எங்ககிட்ட இருந்ததையெல்லாம் கொடுத்துட்டோம். இப்போ கையில ஒண்ணுமே இல்ல. நாங்க ஹாஸ்பிட்டலயே இருக்க வேண்டியிருக்கிறதால மகனை உறவினர் வீட்ல விட்டுருக்கோம். அவனை ஸ்கூலுக்கும் அனுப்ப முடியல. நானும் வேலைக்குப் போக முடியல. சந்தோஷமா இருந்த எங்க அழகான சின்னக் குடும்பத்துக்கு ஏன் இவ்வளவு பெரிய துயர் வந்துச்சு?” - விதியிடம் நம்மால் கேட்க முடிவதெல்லாம் விடையில்லா கேள்விகள்தானே?

’’என் பொண்ணுக்கு எல்லா பிரச்னையும் சரியாகி மறுபடியும் வீட்டுக்கு வருவா. அந்த நம்பிக்கையை நாங்க துளியும் விடவேயில்ல. நல்ல உள்ளங்களோட பிரார்த்தனையும், பண உதவியையும் வேண்டிக்கிறோம். எங்க குடும்பம் எப்பவும் அந்த நன்றியுணர்வோட இருப்போம்.

ஹாஸ்பிட்டல் படுக்கையில இருக்கிற பொண்ணுக்கு, அவளோட சின்ன உடம்புக்குள்ள என்னவெல்லாம் பிரச்னை இருக்குனுகூட தெரியாது. ஆனா, என்ன ஆனாலும் நம்ம அப்பா எப்படியும் நம்மளை காப்பாத்திடுவாங்கனு நம்பிட்டிருப்பானு நினைக்கும்போதே என் மனசெல்லாம் நடுங்க ஆரம்பிச்சிடுது. என் பொண்ணு மாதிரியே நானும் இப்போ ஒற்றை நம்பிக்கையிலதான் இருக்கேன்... அவளைக் காப்பாத்த எப்படியும் நல்ல உள்ளங்களோட உதவி கிடைச்சிடும்னு...’’ - கையெடுத்து வேண்டுபவரின் கண்களில் பெருக்கெடுக்கிறது கடல்.

ஸ்ரீ செண்பக யாழினியின் சிகிச்சைக்கு உதவ விரும்புபவர்கள் help@vikatan.com என்ற மெயில் ஐடி மூலம் தொடர்பு கொள்ளவும்.

அடகு வைக்க செல்லும்போது காணமல் போன கம்மல்... சாதுர்யமாக மீட்டு கொடுத்த ஊராட்சி துணை தலைவர்!

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகில் உள்ள சேரம்பாடி, பாலவாடி பகுதியைச் சேர்ந்தவர் மல்லிகா. தான் அணிந்திருந்த தங்க காதணிகளை குடும்ப சூழ்நிலை காரணமாக அடகு வைப்பதாற்காக சேரம்பாடி கடைவீதிக்கு கொண்டு சென்றிரு... மேலும் பார்க்க

’வேண்டாம்’ இப்போது எப்படியிருக்கிறார்... ரூ.22 லட்சம் சம்பளத்தில் ஜப்பானுக்கு சென்றுவிட்டாரா?

`வேண்டாம்’ இப்போது எப்படி இருக்கிறார்?திருத்தணியைச் சேர்ந்த 'வேண்டாம்’ என்கிற மாணவியை நினைவிருக்கிறதா..? கொரோனாவுக்கு முன்னால் பரபரப்பாக பேசப்பட்ட சிலரில் மிக முக்கியமானவர் இந்த மாணவி. இவருடைய’வேண்டாம... மேலும் பார்க்க

Tsunami 20 : 'எங்கும் பிணக் குவியல்; மனதை மரத்துப்போக வைத்துத்தான்...' - ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்

2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி வழக்கமான ஒரு ஞாயிறு தினமாகவே இருந்திருக்கும், அந்த ஒரு சம்பவம் மட்டும் நடக்காமலிருந்திருந்தால். ஆனால், சுமத்திரா தீவில் ஆழ்கடலில் நிகழ்ந்த நிலநடுக்கம் அங்கு மட்டுமல்ல... மேலும் பார்க்க

ஒரு ஜாக்கெட் தைக்கிறதுக்கு ஒரு ரூபாதான் கூலி- ஒரு டெய்லரின் கதை

தைக்க வேண்டிய துணிகளைப் போட்டு வெட்டுறதுக்கு ஒரு மர டேபிள், தையல் மெஷின்கள், கடை நிறைய கலர் கலரா துணிகள்... இவற்றுக்கு நடுவுல சையத் மதர் வேலைபார்க்கிறதுக்கு கொஞ்சம் இடம். இவ்ளோ தான் சையத் மதரோட டெய்லர... மேலும் பார்க்க

ஒரு போலீஸ்காரரின் கருணைக் கனவு... நிறைவேற்றி வரும் மகள் | Old Age Home | Human Story

அப்பாவின் கனவு...அப்பாவின் கனவை நிறைவேற்றுவதற்காக அனகாபுத்தூரில் இலவச முதியோர் இல்லம் நடத்தி வருகிறார் ஜெயசித்ரா. ஆண், பெண் என 30 பேர் அந்த இல்லத்தில் தஞ்சமடைந்திருக்கிறார்கள். வார இறுதி நாள் ஒன்றில்,... மேலும் பார்க்க

தார்ப்பாய் மூடிய வீடு; ஓதம் ஏறிய தரை-மாற்றுத்திறனாளி மகன்களை பராமரித்து வரும் முதியவரின் துயரக் கதை

இரண்டு மாற்றுத்திறனாளி மகன்களைப் பராமரித்து வாழ்ந்து வரும் 80 வயது முதியவரைப் பற்றிக் கேள்விப்பட்டதும் அவரைக் காண்பதற்காகச் சென்றோம்.தார்ப்பாய் மூடிய குடிசை வீடும், ஓதம் ஏறிய தரையும், உடைபாடுகளுடன் இ... மேலும் பார்க்க