ஒரு போலீஸ்காரரின் கருணைக் கனவு... நிறைவேற்றி வரும் மகள் | Old Age Home | Human Story
அப்பாவின் கனவை நிறைவேற்றுவதற்காக அனகாபுத்தூரில் இலவச முதியோர் இல்லம் நடத்தி வருகிறார் ஜெயசித்ரா. ஆண், பெண் என 30 பேர் அந்த இல்லத்தில் தஞ்சமடைந்திருக்கிறார்கள். வார இறுதி நாள் ஒன்றில், ஷீரடி சாய் கருணை இல்லத்துக்குச் சென்றிருந்தோம். காலை உணவு முடித்துவிட்டு, டி.வி பார்த்தபடி ரிலாக்ஸாக உட்கார்ந்தபடி இருந்தார்கள் அந்த வயதானக் குழந்தைகள்.
பிள்ளைகள் கைவிட்டதால் இந்த இல்லத்துக்கு வந்தவர்கள்... பிள்ளைகளிடம் மனஸ்தாபப்பட்டு கொண்டு இந்த இல்லத்துக்கு வந்தவர்கள் என எல்லோரிடமும் மனதை உருக்கும் ஒரு கதை இருக்கிறது.
’என் வீட்டுக்காரரு என்னை விட்டுட்டு வேற ஒரு பொம்பளைய கூட்டிட்டு ஓடிட்டாரு. எனக்கு சரியா காதும் கேட்காது. வாழ வழி தெரியாம இங்க வந்து சேர்ந்துட்டேன்’ என்கிறார் ஐம்பதுகளில் இருக்கிற பெண்மணி ஒருவர்.
‘நான் கூடையில கருவாடு எடுத்துக்கிட்டு தெருத்தெருவா வித்துக்கிட்டிருந்தேன். வயசாயிடுச்சு. வியாபாரத்துக்குப் போக முடியலை. புள்ளைங்களுக்கு பாரமாகிட்டேன்’ என்கிறார் அறுபதுகளில் இருக்கிற பெண்மணி ஒருவர்.
எழுபதுகளில் இருக்கிற ஒரு முதியவரின் கதை வேறு மாதிரியாக இருக்கிறது. ‘எனக்கு மூணு பொண்ணுங்க. என் வீட்டம்மா பாத்ரூம்ல வழுக்கி விழுந்து இடுப்பு எலும்பு உடைஞ்சிப்போச்சு. என் பொண்ணுங்கதான் மாத்தி மாத்தி அவங்களைப் பார்த்துக்கிறாங்க. என்னைப் பார்த்துக்க அவங்களால முடியல. அதான் இங்க வந்துட்டேன்’ என்கிறார் வருத்தமாக.
முதியோர் இல்லத்தை நடத்தும் ஜெயசித்ரா அவர்களிடம் பேச ஆரம்பித்தோம்.
‘’இலவசமா முதியோர் இல்லம் நடத்தணும்கிறது எங்கப்பா ராஜேந்திரனோட கனவு. அப்பா சின்னப்பிள்ளையா இருக்கிறப்போவே எங்க தாத்தா இறந்துட்டார். எங்க பாட்டி படாதபாடுபட்டு பிள்ளைங்களை வளர்த்து படிக்க வெச்சிருக்காங்க. அப்பா படிச்சி முடிச்சி போலீஸ்ல சேர்ந்துட்டாரு. அப்பாவுக்கு கல்யாணமாகி நாங்க மூணு பொண்ணுங்க பிறந்தோம். அப்பா வேலையிலதான் விறைப்பா இருப்பாரு. ஆனா, குணத்துல ரொம்ப தன்மையான மனுஷன்.
பிள்ளைங்க கைவிட்டதால தெருவுல நின்ன வயசானவங்களை... பிள்ளைங்களே சொத்தை ஏமாத்தி வாங்கிட்டு வீட்டை விட்டு விரட்டின பெத்தவங்களைன்னு நிறைய பேரை அவரோட சர்வீஸ்ல அப்பா பார்த்திருக்கார். அதையெல்லாம் எங்க கிட்ட அடிக்கடி ஷேர் பன்ணுவாரு. ஒருகட்டத்துல ’ரிட்டையர்டானதும் இலவசமா ஒரு முதியோர் இல்லம் நடத்தணும்’னு சொல்ல ஆரம்பிச்சிட்டாரு. ஆனா, அதுக்குள்ள அப்பாவுக்கு உடம்பு சரியில்லாம போய் இறந்துட்டாரு. அப்பா இறக்கிறதுக்கு முன்னாடியே எங்க மூணு பேருக்கும் கல்யாணமாகிடுச்சு.
இந்த நிலையிலதான், அப்பாவோட ஆசையை நிறைவேத்தணும்னு நான் முடிவு செஞ்சேன். என் வீட்டுக்காரர், பசங்க யாரும் இதுக்கு தடை சொல்லலை. எங்கம்மாவும், அப்பா ரிட்டையர்டு ஆனப்போ கிடைச்ச பணத்தைக் கொடுத்து ‘நீ முதியோர் இல்லத்தை ஆரம்பி’ன்னு சொன்னாங்க. ரெண்டு அக்காங்களும், ‘அப்பாவோட கனவை நிறைவேத்தப்போறே, சந்தோஷமா செய்’னு சொல்லிட்டாங்க. முறைப்படி கவர்ன்மென்ட்ல ரிஜிஸ்டர் செஞ்சு இல்லத்தை நடத்த ஆரம்பிச்சு இதோ ஒன்பது வருசம் ஓடிடுச்சு’’ என்கிற ஜெயசித்ரா, இதை நடத்துவதில் தான் சந்திக்கிற சவால்களையும் நம்மிடம் பகிர ஆரம்பித்தார்.
’’நாம இலவசமா பார்த்துக்கிட்டாலும், கரன்ட் பில் கமர்ஷியல்ல தான் வரும். 30 பேர் தங்கணும்கிறதுக்காக ஒரு கல்யாண மண்டபத்தைதான் வாடகைக்கு எடுத்திருக்கேன். நம்ம சின்ன வயசுல பம்பு தண்ணீர் தான் குடிச்சோம். இப்போ, கேன் வாட்டர் செலவே பெரிய செலவா இருக்குங்க. இதுக்கு யோசிச்சா அவங்க ஆரோக்கியம் கெட்டுப்போயிடுமே... முப்பது பேருக்கு துணி மணி செலவும் இருக்கு. ஆளுக்கு மூணு செட் ட்ரெஸ் வாங்கிக் கொடுப்பேன். பழசாயிடுச்சின்னா, அதையெல்லாம் பாத்திரக்காரனுக்குப் போட்டு பிளாஸ்டிக் சாமான் வாங்கி இல்லத்துல வெச்சிடுவேன்.
ஃபங்ஷன்ல மீந்துபோன சாப்பாட்டைக் கொடுத்தா வாங்கிக்க மாட்டேன். அது எப்போ சமைச்சதுன்னு தெரியாது. அதைவிட முக்கியமா சாப்பாடு நேரம் முடிஞ்சப்புறம் கொண்டு வந்து தருவாங்க. அதை வாங்கிட்டா அடுத்த வேளைக்குத்தான் கொடுக்கணும். வயசானவங்க வயித்துக்கு அது ஒத்துக்காது. இதுவே, ‘எங்க வீட்ல ஃபங்ஷன். உங்க இல்லத்துல இருக்கிறவங்களுக்கும் சேர்த்து சமைச்சித் தரோம்னு சொன்னா சந்தோஷமா வாங்கிப்பேன். சிலர் அரிசி, பருப்பு, காய்கறி, பழம்னு ஏதோ ஒண்ணு வாங்கித்தருவாங்க. இந்த உதவியெல்லாம் தினமும் கிடைக்காதில்லையா... அப்போ நானே பார்த்துப்பேன்’’ என்றவர், தன்னுடைய இல்லத்தில் இருக்கிற முதியவர்கள் சார்பில் அரசாங்கத்திடம் ஒர் உதவியைக் கோருகிறார்.
’’இங்க இருக்கிறவங்கள்ல நிறைய பேர் அவங்க வீட்ல இருந்தப்போ முதியோர் பென்ஷன் வாங்கினவங்கதான். இப்போ சூழ்நிலை காரணமா இந்த இல்லத்துல இருக்காங்க. இதனால, இவங்களோட பசங்களோ, இல்லைன்னா அக்கம் பக்கம் இருக்கிறவங்களோ ‘அவங்க முதியோர் இல்லத்துக்குப் போயிட்டாங்க’ன்னு சொல்லிடுறாங்க. அதனால, இவங்களோட பென்ஷனை கவர்ன்மென்ட்ல நிறுத்திட்டாங்க. என்னதான் நான் இவங்களைப் பார்த்துக்கிட்டாலும், அவங்க கைல காசு இருந்தா, அவங்க மருந்து, மாத்திரை செலவுக்கு ஆகுமில்லையா... கவர்ன்மென்ட் இந்த உதவியை செஞ்சா, இங்க இருக்கிறவங்களுக்கு அது பெரிய உதவியா இருக்கும்க’’ என்கிறார் ஜெயசித்ரா.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...