யுஜிசி புதிய விதிகளுக்கு எதிராக சட்டப்பேரவையில் தனித் தீர்மானம்!
கிரீன்லாந்து மீது அமெரிக்கா ராணுவ நடவடிக்கை? டொனால்ட் டிரம்புக்கு பிரான்ஸ் எச்சரிக்கை!
அமெரிக்க அதிபராகப் பதவியேற்கவிருக்கும் டொனால்ட் டிரம்புக்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் எச்சரிக்கை விடுத்துள்ளது உலக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘கிரீன்லாந்து’ தீவு விவகாரத்தில் அமெரிக்காவை எச்சரித்திருக்கிறது ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினரான பிரான்ஸ்.
கிரீன்லாந்துக்கு டிரம்ப்பின் மகன் ‘டொனால்ட் டிரம்ப் ஜூனியர்’ சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், கிரீன்லாந்தை அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதை உறுதிப்படுத்தியிருக்கிறார் டிரம்ப்.
டொனால்ட் டிரம்ப் இன்று(ஜன. 8) செய்தியாளர்களுடன் பேசியபோது, “கிரீன்லாந்து (பனாமா கால்வாய்ப் பகுதியை) தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ராணுவ நடவடிக்கையோ அல்லது பொருளாதார நடவடிக்கையோ எடுக்க தயங்கமாட்டோம். அமெரிக்காவின் பொருளாதாரப் பாதுகாப்புக்காக, மேற்கண்ட பகுதிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருப்பது அவசியம்” என்று பொருள்பட அவர் பேசியுள்ளார்.
இந்த நிலையில், “உலகின் பிற நாடுகளை தங்கள் எல்லைக்குள் ஆதிக்கம் செலுத்த ஐரோப்பிய ஒன்றியம் அனுமதிக்குமா? என்ற கேள்விக்கே இடமில்லை!, அது யாராக இருந்தாலும் சரி” என்று பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீன்-நோயல் பாரட் தெரிவித்துள்ளார். மேலும், கிரீன்லாந்து மீது அமெரிக்கா ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடாது என்பதை உறுதியாக சொல்ல முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
டிரம்ப்பும் கிரீன்லாந்து சர்சையும் புதிதல்ல. தான் முதல்முறையாக அமெரிக்க அதிபராகப் பதவி வகித்தபோது, டென்மார்க்கின் ஓர் அங்கமாக தன்னாட்சி பெற்ற பிராந்தியமாகத் திகழும் கிரீன்லாந்து தீவை, விலைக்கு வாங்கப்போவதாக அறிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார் டிரம்ப்.
இந்த நிலையில், இன்னும் சில நள்களில் அவர் அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாகப் பதவியேற்கப் போகும் நிலையில், கிரீன்லாந்து விவகாரத்தை மீண்டும் தூசித்தட்டியிருக்கிறார்.
கடந்தாண்டு டிசம்பர் 23-ஆம் தேதி அவர் வெளியிட்டிருந்த சமூக வலைதளப் பதிவொன்றில், “உலகம் முழுவதும் தேசிய பாதுகாப்புக்காகவும் சுதந்திரத்துக்காகவும், கிரீன்லாந்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதும், அதனை உரிமை கொள்வதும் கட்டாய தேவை என அமெரிக்கா கருதுகிறது” என்று குறிப்பிட்டிருந்தார் டிரம்ப்.
முன்னதாக, உலகின் பிற பிராந்தியம் ஒன்றை அமெரிக்கா தங்கள் நாட்டின் ஒரு பகுதியாக்க, அதனை விலை கொடுத்து சொந்தமாக்கிக் கொண்டது ‘1917’-இல். அந்த வகையில், மேற்கு இந்தியத் தீவு பகுதிகளில் ஒன்றான ‘டேனிஷ் மேற்கு இந்தியத் தீவு’ அமெரிக்காவின் நிர்வாகப் பிராந்தியங்களுள் ஒன்றானது. அதன்பின், ‘அமெரிக்க விர்ஜின் தீவுகள்’ எனப் பெயர் மாற்றப்பட்டு தற்போது அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ளது.
கரீபியன் தீவுகளில் அமெரிக்க ராணுவ தளத்தை அமைக்கவே அமெரிக்க இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாகப் பார்க்கப்படுகிறது.
முன்னதாக, டென்மார்க்கிடமிருந்து விர்ஜின் தீவுகளை தங்கள் வசமாக்க, அமெரிக்கா கடந்த காலங்களில் மேற்கொண்ட முயற்சி இரு முறை(1867, 1902) தோல்வியிலேயே முடிந்தது. மேலும், முதலாம் உலகப் போர் காலகட்டங்களில், 1914-இல் இது தொடர்பான பேச்சுவார்த்தை அமெரிக்கா மற்றும் டென்மார்க் இடையே தீவிரமடைந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. ஜெர்மனியால் கிரீன்லாந்து ஆக்கிரமிக்கப்படும் என்கிற அச்சமே இந்த நடவடிக்கைக்கு முக்கிய காரணமாகும்.
1916-இல் டென்மார்க்கில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டதில், நாடாளுமன்ற உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் கிரீன்லாந்தை அமெரிக்கா வசம் ஒப்படைக்க ஆதரவு தெரிவித்திருந்தனர். அதனடிப்படையில், மார்ச் 31, 1917-இல், 25 மில்லியன் டாலர்களுக்கு(தங்க நாணயங்களாக அளிப்பு) கிரீன்லாந்தை அமெரிக்கா வசம் ஒப்படைத்தது டென்மார்க்.
இன்னொருபுறம், அமெரிக்கா தங்கள் நாட்டின் ராணுவ பலத்தால் ஒரு பகுதியை ஆக்கிரமித்திருந்தது கடைசியாக 1898-இல். பிலிப்பின்ஸ், குவாம், பியூர்டோ ரிகோ ஆகிய பிராந்தியங்களை ஸ்பெயினுடனான சண்டையில் வெற்றி பெற்று தங்கள் கட்டுப்பட்டுக்குள் கொண்டு வந்திருந்தது அமெரிக்கா.
எனினும், பிற்காலத்தில் பிலிப்பின்ஸ் தன்னாட்சி பெற்ற தேசமாக அறிவிக்கப்பட்டும் விட்டது. ஆனால், இந்நாள் வரை, விர்ஜின் தீவுகள், குவாம், பியூர்டோ ரிகோ ஆகிய பகுதிகள் அமெரிக்காவின் ஓர் அங்கமாகவே விளங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், “கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல! கிரீன்லாந்து மக்களுக்கே கிரீன்லாந்து சொந்தம்” என்று அந்நாட்டின் பிரதமர் ம்யூட் எகேடே மீண்டும் ஒருமுறை செவ்வாய்க்கிழமை(ஜன. 7) திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார்.
டென்மார்க் பிரதமர் மெட்டே ஃப்ரெடெரிக்செனும் மேற்கண்ட கருத்தை வழிமொழிந்துள்ளார். “கிரீன்லாந்து மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், கிரீன்லாந்துக்கு வருடாந்திர நிதியாக 521 மில்லியன் டாலர்கள் வழங்கிட டென்மார்க் இந்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.