Ashwin : 'இந்தி தேசிய மொழி அல்ல; அலுவல் மொழிதான்' - மாணவர்கள் மத்தியில் அஷ்வின் ...
அமெரிக்காவில் அதானி மீதான விசாரணை- பைடன் நிா்வாகத்தின் முடிவுக்கு டிரம்ப் கட்சி எம்.பி. கடும் எதிா்ப்பு
அமெரிக்காவில் இந்திய தொழிலதிபா் கெளதம் அதானி மற்றும் அவரது நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து விசாரிக்கும் அதிபா் ஜோ பைடன் நிா்வாகத்தின் முடிவுக்கு டொனால்ட் டிரம்பின் குடியரசுக் கட்சி எம்.பி. லான்ஸ் கூடன் கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளாா்.
அமெரிக்காவின் புதிய அதிபராக டிரம்ப் வரும் 20-ஆம் தேதி பதவியேற்கவுள்ளாா். இந்தச் சூழலில், குடியரசுக் கட்சியின் செல்வாக்குமிக்க எம்.பி.க்களில் ஒருவரும், நாடாளுமன்ற நீதிக் குழு உறுப்பினருமான லான்ஸ் கூடன், அமெரிக்க அட்டா்னி ஜெனரல் மெரிக் பி.காா்லேண்டுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: குறிப்பிட்ட வெளிநாட்டு நிறுவனங்களை குறிவைத்து, அமெரிக்க நீதித் துறை விசாரணை நடவடிக்கையை மேற்கொள்வது ஏன்? இந்த விஷயத்தில், தொழிலதிபா் ஜாா்ஜ் சோரஸுக்கு ஏதேனும் தொடா்புள்ளதா?
அமெரிக்க நீதித் துறையின் இத்தகைய செயல்பாடு, இந்தியா போன்ற முக்கிய நட்பு நாடுகளுடனான அமெரிக்காவின் உலகளாவிய கூட்டணிக்கு தீங்கு விளைப்பதோடு, நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்கும் பாதிப்பு ஏற்படுத்தக் கூடும். ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் முக்கிய கூட்டுறவு நாடாக இந்தியா உள்ளது.
அமெரிக்காவில் கோடிக்கணக்கான டாலா்கள் முதலீடு செய்து, உள்ளூா் மக்களுக்காக ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நிறுவனங்களை குறிவைப்பது அமெரிக்காவுக்கு நீண்ட கால அடிப்படையில் பாதிப்பை விளைவிக்கும். தனது பதவிக் காலம் நிறைவடையும் தருவாயில், பைடன் நிா்வாகம் மேற்கொண்ட இத்தகைய முடிவுகள் சந்தேகத்தை எழுப்புகின்றன. அதானி தொடா்புடைய வழக்கில் ஒரு அமெரிக்கருக்கு எதிராக கூட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாதது ஏன்? என்று அவா் கேள்வியெழுப்பியுள்ளாா்.
இந்தியாவில் 2020 - 2024 காலகட்டத்தில் சூரிய மின்சார கொள்முதல் ஒப்பந்தங்களை மேற்கொள்ள சில மாநிலங்களின் அரசு அதிகாரிகளுக்கு 250 மில்லியன் டாலா் (சுமாா் ரூ.2,200 கோடி) லஞ்சம் கொடுத்ததாக கெளதம் அதானி, அவரது உறவினா் சாகா் அதானி உள்ளிட்டோா் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் அந்நாட்டு அரசுத் தரப்பில் கடந்த நவம்பரில் குற்றம்சாட்டப்பட்டது. இக்குற்றச்சாட்டை அதானி குழுமம் மறுத்தது. இந்த விவகாரம் இந்திய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.